BV Production நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்கியுள்ள, நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை”. சமகால சமூக பிரச்சனைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் மே 15ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் முன்வெளியீட்டு விழா, படக்குழுவினரும் திரைப் பிரபலங்களும் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன் பேசுகையில், “இயக்குநர் பாபு விஜய் எனக்கு மிகவும் நெருக்கமானவர். முதல் படத்திலேயே தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் இரட்டை பொறுப்பை ஏற்று இப்படத்தை உருவாக்குவது எவ்வளவு கடினம் என்பதை நான் நன்றாக அறிவேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தப் படத்திற்கு முழுமையாக உழைத்தேன். இந்தப் படம் நிச்சயம் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்றார்.
உடை வடிவமைப்பாளர் கமலி பேசுகையில், “இந்த வாய்ப்பை வழங்கிய ஜெய் மற்றும் பாபு விஜய்க்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படக்குழுவுடன் பணியாற்றியது மிகவும் இனிய அனுபவமாக இருந்தது. பாபு விஜயிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். குறிப்பாக மீனாட்சியுடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருந்தது,” என்று தெரிவித்தார்.
எடிட்டர் டார்லிங் ரிச்சர்ட்சன் பேசுகையில், “BOFTA-வில் தொடங்கிய எங்கள் பயணம் இன்று ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது. பாபு விஜய் மீது வைத்த நம்பிக்கைக்காக அவருக்கு நன்றி. ஜெய் சாருடன் மீண்டும் பணியாற்றியது எனக்கு ஆசீர்வாதம் போல இருந்தது. என்னுடைய குருக்கள் லலின் சார், ரூபன் சார் மற்றும் அட்லி சாருக்கு இந்த மேடையில் நன்றி சொல்ல விரும்புகிறேன்,” என்றார்.
CFO சத்யநாராயணன் பேசுகையில், “இந்தப் படம் பாபு விஜயின் கனவு திரைப்படம். இதற்காக முழு குழுவும் கடுமையாக உழைத்துள்ளது. இப்படம் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.
இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், “ஜெய் இந்தப் படத்தின் இசை உருவாக்கத்தில் அதிக ஈடுபாட்டுடன் இருந்தார். சிறிய விஷயங்களையும் விவாதித்து சிறந்த ஆலோசனைகளை வழங்கினார். பாபு விஜய் வேகமாகவும் தெளிவாகவும் முடிவெடுக்கும் இயக்குநர். அவருடைய இசை ரசனை இந்தப் படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது,” என்றார்.
தொழிலதிபரும் முன்னாள் சென்சார் போர்டு உறுப்பினருமான சிவகுமார் பேசுகையில், “நான் பல ஆண்டுகளாக சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் சத்யநாராயணனின் அழைப்புக்காக இந்த விழாவிற்கு வந்துள்ளேன். பாபு விஜயின் திறமையில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. அவர் அடுத்ததாக இயக்கும் படத்திற்கு 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய தயாராக இருக்கிறேன்,” என்று கூறினார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “BOFTA-விலேயே பாபு விஜய் தனித்துவமான மாணவராக இருந்தார். முருகதாஸ் சாரிடம் உதவி இயக்குநராக சேர வேண்டும் என்பதே அவரது கனவு. இன்று அந்த கனவிலிருந்து இயக்குநராக வளர்ந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். கமர்ஷியல் அம்சங்களுடனும் சமூக பொறுப்புடனும் இப்படம் உருவாகியுள்ளது,” என்றார்.
நடிகர் கதிர் பேசுகையில், “ஜெய் சாருடன் நடித்த அனுபவம் மிகவும் ஸ்பெஷல். அவருடன் நடித்தபோது விஜய் சாருடன் நடித்த உணர்வு கிடைத்தது. மீனாட்சியுடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. இந்தப் படம் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரசிகர்களை கவரும்,” என்று தெரிவித்தார்.
நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் பேசுகையில், “இந்த வாய்ப்பை வழங்கிய பாபு விஜய்க்கு நன்றி. பல சவால்களை கடந்து இன்று இந்த மேடையில் நிற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெய் சாருடன் மீண்டும் பணியாற்றியது அருமையான அனுபவம். படக்குழுவின் முழு உழைப்பும் திரையில் தெரியும்,” என்றார்.
இயக்குநர் சசி பேசுகையில், “பாபு விஜய் BOFTA-விலிருந்தே மிகவும் திறமையான மாணவர். டிரெய்லர், பாடல்கள் மற்றும் காட்சிகளை பார்த்தபோது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. ரிச்சர்டின் ஒளிப்பதிவும் கிரிஷின் இசையும் படத்திற்கு பெரிய பலமாக இருக்கிறது. ஜெய் சாரின் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசுகையில், “பாபு விஜய் எனக்கு மிகவும் நெருக்கமானவர். உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்தார். எந்த ஒரு பணியையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், முழு ஈடுபாட்டுடன் செயல்படுவார். கடினமான சூழ்நிலைகளிலும் என்னுடன் துணையாக இருந்தவர் அவர். இன்று இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகும் இந்த தருணம் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்,” என்றார்.
இயக்குநர் பாபு விஜய் பேசுகையில், “என் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் முருகதாஸ் சார். அவரிடம் உதவி இயக்குநராக வேலை செய்ததே எனக்கு மிகப்பெரிய பாடமாக இருந்தது. இந்தப் படம் உருவாக காரணமான அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். குறிப்பாக ரிச்சர்ட் சார் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இந்தப் படத்திற்காக முழுமையாக உழைத்தார். ஜெய் இந்தப் படத்தில் அசாதாரணமான நடிப்பை வழங்கியுள்ளார்; அவரை இன்னும் முழுமையாக தமிழ் சினிமா பயன்படுத்தவில்லை என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு தர வேண்டும்,” என்றார்.
நடிகர் ஜெய் பேசுகையில், “முருகதாஸ் சார் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவருடைய படங்களும், வேலை செய்யும் விதமும் என்னை எப்போதும் கவர்ந்திருக்கிறது. இந்தப் படத்தின் இசை, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் அனைத்தும் மிக உயர்ந்த தரத்தில் வந்துள்ளது. பாபு விஜய் கதையை சொல்லிய தருணத்திலேயே இந்தப் படம் வித்தியாசமாக இருக்கும் என்று எனக்கு புரிந்தது. முதல் பாதியில் கமர்ஷியல் அம்சங்களும், இரண்டாம் பாதியில் வலுவான உணர்ச்சிகளும் இருக்கும். ரசிகர்கள் திரையரங்கில் இந்தப் படத்தை கண்டிப்பாக ரசிப்பார்கள்,” என்று தெரிவித்தார்.
இப்படத்திற்கு இசையை கிரிஷ் கோபாலகிருஷ்ணன் அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம். நாதன் மேற்கொண்டுள்ளார். டார்லிங் ரிச்சர்ட்சன் எடிட்டிங் செய்துள்ள இப்படம், வரும் மே 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.