BV Production நிறுவனம் சார்பில் இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்கியுள்ள, நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்திருக்கும் புதிய ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை”. சமகால சமூக பிரச்சனைகளை வலுவாக பேசும் விதத்தில் உருவாகியுள்ள இப்படம், வித்தியாசமான கதைக்களத்தால் கவனம் ஈர்த்துள்ளது.
இப்படத்தில் கதாநாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மனித வாழ்க்கையில் தொடர்ந்து நிகழும் அதிர்வுகள், எதிர்பாராத ஆச்சரியங்கள் மற்றும் உணர்வுகளின் பயணமே இப்படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது. அதோடு, நாட்டில் தற்போது நடைபெற்று வரும் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய முக்கிய பிரச்சனைகளையும் இப்படம் தைரியமாக எடுத்துரைக்கிறது.
வரும் மே 15ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் முன்வெளியீட்டு விழா, படக்குழுவினரும் திரையுலக பிரபலங்களும் கலந்து கொள்ள, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் நடிகர் ஜெய் பேசுகையில்,
“இங்கே வந்திருக்கும் அனைவருக்கும், ஊடக நண்பர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறிப்பாக A.R. முருகதாஸ் சார், சசி சார், சினேகன் சார், எங்கள் ஃபைட் மாஸ்டர், எடிட்டர், இசையமைப்பாளர், கேமராமேன் ரிச்சர்ட் சார் உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்போது அனைவரும் மிகவும் பிஸியான வாழ்க்கையில் இருக்கிறார்கள். அந்த வேலைப்பளுவின் நடுவிலும், ‘இவர்கள் அழைக்கிறார்கள், சென்று பார்ப்போம்’ என்ற அன்புடன் இங்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் எங்களுக்காக ஒதுக்கிய இந்த நேரத்தை நான் உண்மையாக மதிக்கிறேன்.
பொதுவாக என் நண்பர்களும் குடும்பத்தினரும், ‘உனக்கு மிகவும் பிடித்த இயக்குநர் யார்?’ என்று கேட்பார்கள். நான் எப்போதும் ஒரே பெயரைத்தான் சொல்வேன் — முருகதாஸ் சார். பின்னர் அவர்கள் மணிரத்னம் சார், ஷங்கர் சார், முருகதாஸ் சார் என ஆப்ஷன்கள் கொடுத்தாலும், என் பதில் மாறாது. அவருடைய படங்களும், அவர் பேசும் விதமும், அவரது குணாதிசயமும் என்னை மிகவும் பாதித்தவை. அவருக்கே தெரியாமல் நான் அவரிடமிருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.
ஒருமுறை காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் எனக்குச் சொன்ன ஒரு விஷயம் இன்று வரை என் வாழ்க்கையில் நான் பின்பற்றும் பழக்கமாக மாறிவிட்டது. ‘ஷூட்டிங் இருக்கும் நாட்களில் சீக்கிரம் தூங்குங்கள். லேட்டாக தூங்கினால் டார்க் சர்கிள்ஸ் வரும். அதை மறைக்க மேக்கப் போட வேண்டி வரும். அதற்காக கேமராமேன் லைட்டிங்கை மாற்ற வேண்டியிருக்கும். உங்களின் ஒரு சிறிய தூக்கமின்மை கூட பலரின் வேலையை பாதிக்கும்’ என்று அவர் கூறினார். அந்த வார்த்தைகள் எனக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்தது. இன்று வரை ஷூட்டிங் இருந்தால் இரவு 10:30 ஆகும்போதே முருகதாஸ் சார் நினைவுக்கு வந்துவிடுவார்.
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் பற்றியும் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் வேறு ஒருவரைப் பற்றி பேச்சு நடந்தது. பின்னர் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இசையமைப்பாளரே நமக்கு வேண்டும் என்று இயக்குநர் கூறினார். முதல் பாடலின் முதல் 30 விநாடிகள் கேட்டவுடனே, ‘சரியான ஆள் கிடைத்துவிட்டார்’ என்று எனக்குப் புரிந்துவிட்டது. குறிப்பாக AirPods-ல் அந்தப் பாடலைக் கேட்டபோது அதன் தரமும் புதுமையும் மிகவும் கவர்ந்தது. அதனால் தான் பாடல் வெளியாகிய உடனே மில்லியன் கணக்கில் பார்வைகளை பெற்றது.
எடிட்டரும் இந்தப் படத்தில் மிகவும் நேர்த்தியாக வேலை செய்துள்ளார். இது அவருக்கே மிகவும் சவாலான படம். படத்தைப் பார்க்கும்போது அது ரசிகர்களுக்கே புரியும். அதேபோல் ரிச்சர்ட் சாரின் உழைப்பையும் நான் மறக்க முடியாது. நாங்கள் ‘9 to 6 ஷூட்டிங்’ என்று சொன்னாலும், பலமுறை ஒரு கூடுதல் ஷாட் எடுப்பதற்காக இரவு வரை வேலை நீளும். நான் வீட்டுக்குப் போன பிறகும், அவர்கள் இன்னொரு லொக்கேஷனில் ஷூட் செய்து கொண்டிருப்பார்கள். இரவு 12, 1 மணி வரை வேலை செய்து மறுநாள் காலை மீண்டும் ஸ்பாட்டில் இருப்பார்கள். அந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் அவர்கள் பணியாற்றியுள்ளனர்.
ரிச்சர்ட் சார் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக அறிவிக்கப்பட்ட உடனே எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அப்போது ‘மாநாடு’ படம் வெளியாகி இருந்தது. அந்தப் படத்தின் கேமரா வேலை மற்றும் எடிட்டிங் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. அதே தரமான ஃப்ரேமிங்கும் விஷுவல் தரமும் இந்தப் படத்திலும் இருக்கிறது.
இப்போது தயாரிப்பாளர் பாபு விஜய் பற்றி சொல்ல வேண்டும். ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் என்ன என்பதை இந்தப் படத்தில்தான் நான் நெருக்கமாக புரிந்துகொண்டேன். நடிகனாக இருக்கும்போது பணம் எங்கிருந்து வருகிறது, எவ்வளவு வட்டி கொடுக்கப்படுகிறது போன்ற விஷயங்கள் தெரியாது. ஆனால் இந்தப் படத்தின் மூலம் அதை நேரில் பார்த்தேன். ஒவ்வொரு ஷாட்டுக்கும் அவர் கணக்குப் பார்த்து, தேவையான இடத்தில் மட்டும் செலவு செய்து, தேவையில்லாத செலவுகளை தவிர்த்தார். அதுதான் ஒரு நல்ல தயாரிப்பாளரின் அடையாளம்.
இயக்குநர் பாபு விஜய் பற்றி சொல்ல வேண்டுமெனில், அவர் அளவுக்கு அதிகமான எனர்ஜியுடன் வேலை செய்பவர். சில நேரங்களில் ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குப் போன பிறகும், கனவில் கூட ‘டார்லிங் ரெடி டார்லிங்’ என்று கூப்பிடுவார் போல இருக்கும். ஒரு நாளில் 150 சீன்கள் எடுத்த மாதிரி வேகம் இருக்கும். ஆனால் யாரையும் சோர்வடைய விடமாட்டார். அவருக்கு என்ன வேண்டும் என்பது தெளிவாக தெரியும். அதே சமயம் நல்ல யோசனைகளை மனதார ஏற்றுக்கொள்வார்.
அவர் இந்தக் கதையை சொன்ன உடனே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஏனெனில் அவர் முழு படத்தையும் ஒரு முழுமையான பேக்கேஜாக யோசித்திருந்தார். முதல் பாதியில் விஜய் சார் ரசிகர்களை கவரும் தருணங்கள் இருக்கும். உடல் மொழி, டயலாக் டெலிவரி போன்ற விஷயங்களில் அந்த சாயல் இருக்கும். ஆனால் இரண்டாம் பாதியில் படம் முற்றிலும் வேறொரு தாக்கத்திற்கு மாறிவிடும்.
இது ஒரு முதல் இயக்குநருக்கு மிகவும் சவாலான ஸ்கிரிப்ட். அவர் விரும்பியிருந்தால் சாதாரண கமர்ஷியல் பாதையில் சென்றிருக்கலாம். ஆனால் கதைக்குத் தேவையான இடத்தில் ஹீரோயிசத்தையும், கதையின் உணர்வையும் சரியாக சமநிலைப்படுத்தியுள்ளார். அதனால் இந்தப் படத்தை நீங்கள் திரையரங்கில் கண்டிப்பாக ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”
இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் M. நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டார்லிங் ரிச்சர்ட்சன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். கலை இயக்குநர் S. கண்ணன் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினரும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளனர், என்றார்.
இப்படம் வரும் மே 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.