நடிகர், இசையமைப்பாளர், எடிட்டர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான விஜய் ஆண்டனி, தனது அடுத்த படைப்பான அப்பா குட்டி மூலம் மீண்டும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான மற்றும் தரமான திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்க தயாராகியுள்ளார். மு. மாறன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்டு உருவாகும் ஆக்ஷன் குடும்ப திரைப்படமாக அமைகிறது.
உணர்ச்சிகளைத் தொடும் மற்றும் சமூகத்துடன் தொடர்புடைய கதைகளை உருவாக்குவதில் தனித்துவம் பெற்ற மு. மாறன், இந்தப் படத்தை அதிரடி, குடும்ப பாசம், ஆழமான உணர்வுகள் மற்றும் வலுவான காட்சி அம்சங்களுடன் உருவாக்கியுள்ளார். குடும்ப ரசிகர்களையும், ஆக்ஷன் ரசிகர்களையும் ஒருசேர கவரும் வகையில் படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அப்பா குட்டி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, பின்னணி பணிகள் ( Post Production )முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
விஜய் ஆண்டனி, இந்தப் படத்தில் உணர்ச்சி ஆழமும் அதிரடி நிறைந்த நடிப்பையும் வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். தந்தை மற்றும் மகளுக்கிடையிலான பாசமிக்க உறவை மையமாகக் கொண்ட இந்தக் கதை, அதனுடன் இணைந்த ஆக்ஷன் அம்சங்கள் மூலம் உணர்வுகளை மேலும் வலுப்படுத்துகிறது.
படத்தில் ப்ரீத்தி அஸ்ரணி, லிதான்யா, பகவதி பெருமாள், ஹரிபிரியா, இசையருவி மதன், சித்ரா லக்ஷ்மணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் தீவாகர், முருகானந்தம், மூணார் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.