மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப் பின்னணியில் உருவாகியிருக்கும் பரபரப்பான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் மர்மமான தொடர் கொலைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம் ஜூலை 17ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.
மக்களிடம் மரபு வழியாகப் பரவிச் செல்வாக்கு பெற்ற தொன்மம் சார்ந்த கதைகளுக்கு தனி நிறமுண்டு. அவை காலம் கடந்தும் மக்களிடம் பரவலாகப் பேசப்படுவதுண்டு.அவ்வகையில் சமூகத்தில் நிலவும் ஒரு நாட்டார் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக ‘தி டார்க் ஹெவன்’ உருவாகியுள்ளது. இந்தப் படம் ஒரு மலைக் கிராமத்தில் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை வருகிற ஜூன் மாதங்களில் நடக்கும் தொடர் கொலைகளை விசாரிக்கும் ஒரு போலீஸ்காரரைப் பற்றியது.
இப்படம் பற்றி இயக்குநர் பாலாஜி பேசும் போது,
“தமிழ் ரசிகர்கள் எப்போதும் க்ரைம் த்ரில்லர் படங்களை வெகுவாக ரசிப்பார்கள் .அதிலும் குறிப்பாக வித்தியாசமான கதைகள் கொண்ட படங்களை எப்போதும் வரவேற்று ஆதரிப்பார்கள். அவர்களின் எதிர்பார்ப்பிற்கும் எண்ணத்திற்கு ஏற்ப உருவாகி இருக்கிறது இந்த ‘தி டார்க் ஹெவன்’ திரைப்படம்.
ஒரு புறம் தொடர் கொலைகள் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் போலீசாருக்கு நடந்த கொலைகளில் எந்த தடயங்களும் கிடைக்கவில்லை, இப்படி இருக்கும் போது அந்த ஊருக்கு புதிதாக வந்த இன்ஸ்பெக்டர் பாரி தன் விசாரணையை தொடங்குகிறார், அவர் கொலையாளி யார் என்பதை கண்டுபிடித்தாரா என்பதை மையாமாக கொண்டது இந்த தி டார்க் ஹெவன் திரைப்படம். இந்தப் படத்திற்குப் பின்னப்பட்டிருக்கும் திரைக்கதை நேர்த்தியாக அமைந்து படத்தை விறுவிறுப்பாக கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது.
இப்படத்தின் கதாநாயகனாக ‘ராஜா ராணி ‘தொடரின் மூலம் புகழ்பெற்ற சித்து சித் நடித்துள்ளார்.பிக்பாஸ் புகழ் தர்ஷிகா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ரித்விகா, நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ஜெயகுமார் ஜானகிராமன், அருள் சங்கர், பிரதீப், அலெக்ஸ், டேனி தயாள் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். இதுவரை நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வந்த சாப்ளின் பாலு இதில் புதுவிதமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.அந்த வகையில் அவருக்கு இது மறுபிரவேசமாக இருக்கும்.
தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று எடுத்துக் கொண்டால்
எனது முதல் படத்தில் பணியாற்றிய மணிகண்டன் பிகே இதிலும் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்திருக்கிறார். அதே போல் எடிட்டிங் ராஜா ஆறுமுகம் செய்துள்ளார்.இசையமைப்பாளராக ‘ஜாக்கி’ படத்தில் பணியாற்றிய சக்தி பாலாஜி பணிபுரிந்துள்ளார்.இவர்கள் அனைவரும் என் நண்பர்கள் .தங்கள் திறமையைக் காட்டி உழைத்துள்ளார்கள்.
இதன் படப்பிடிப்பு வண்டிப்பெரியார், அச்சன் கோவில், தென்மலை, ஏற்காடு, பத்துகாணி, தென்காசி மற்றும் முக்கூடல் போன்ற சவால் நிறைந்த மலை சார்ந்த பகுதிகளில் படமாக்கப்பட்டு
படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விட்டது.டப்பிங் வேலைகள், இறுதிக்கட்ட மெருகேற்றும் பணிகள் நிறைவடைந்து தணிக்கைக்காகச் சென்றுள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஜூன் மாதம் 25ஆம் தேதி நடைபெற உள்ளது.
சமீபமாக கொண்டாடப்படும் மலையாள க்ரைம் திரில்லர் படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ஜூலை மாதம் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ” இவ்வாறு இயக்குநர் பாலாஜி கூறினார்.