“குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய படம் ‘கான் சிட்டி’” – அர்ஜூன் தாஸ் நம்பிக்கை!

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “கான் சிட்டி” திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் படத்தின் டிரெய்லர் பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படக்குழுவினர் திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்வினில் நடிகர் அர்ஜூன் தாஸ் பேசுகையில்..,

“அனைவருக்கும் வணக்கம். முதலில் இயக்குநர் ஹரிஷுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆரம்பத்திலிருந்தே மிகத் தெளிவான திட்டமிடலுடன், முழு நம்பிக்கையுடனும், உறுதியுடனும் இந்தப் படத்தை முன்னெடுத்து வந்திருக்கிறார். ஒரு இயக்குநராக அவர் காட்டிய அர்ப்பணிப்பும், உழைப்பும், தன்னம்பிக்கையும் மிகவும் பாராட்டத்தக்கது.

இந்தப் படத்தை இவ்வளவு பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க தயாரிப்பாளர்கள் எடுத்த முயற்சி மிகப் பெரியது. நகரம் முழுவதும் போஸ்டர்கள், பேனர்கள், விளம்பரங்கள் என இப்படத்திற்காக அவர்கள் செய்துள்ள புரமோஷன் என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதற்காக அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் வெளியீட்டில் இணைந்துள்ள அபிஹிம்சா பிலிம்ஸ், டெல்டா ஸ்டுடியோஸ் மற்றும் படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. படத்தைப் பார்த்து பாராட்டியவர்களுக்கும் எனது நன்றிகள்.

‘கான் சிட்டி’ ஒரு குடும்பத்துடன், நண்பர்களுடன், உறவினர்களுடன் சேர்ந்து ரசிக்கக்கூடிய திரைப்படம். இதில் உணர்ச்சிகளும் இருக்கின்றன, நகைச்சுவையும் இருக்கிறது, அதே நேரத்தில் மனதைத் தொடும் ஒரு அழகான கதையும் இருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகரும் தங்களது சிறந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். அன்னா பென், வடிவுக்கரசி அம்மா, யோகி பாபு, அருள்தாஸ் மற்றும் மற்ற அனைத்து கலைஞர்களின் பங்களிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் அற்புதமான இசையை வழங்கியுள்ளார். தொழில்நுட்பக் குழுவின் உழைப்பும் படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளது.

இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நம்பிக்கையுடன் திரையரங்குகளுக்கு வாருங்கள். படம் பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து மூத்த கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முழு படக்குழுவினருக்கும் மீண்டும் ஒருமுறை என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘கான் சிட்டி’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தொடர்ந்து வழங்குங்கள். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

Comments (0)
Add Comment