குற்றம், தண்டனை, மறுவாழ்வு… விவாதத்தை கிளப்பும் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’

கன்னட திரையுலகில் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கி, முன்னணி இயக்குநரும் தயாரிப்பாளருமான தயாள் பத்மநாபன், தனது துல்லியமான திட்டமிடல், குறுகிய கால படப்பிடிப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதைகளால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றவர். அவர் இயக்கிய படங்கள் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

2023-ஆம் ஆண்டு ‘கொன்றால் பாவம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமான அவர், அதனைத் தொடர்ந்து ‘மருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ படத்தை இயக்கி தயாரித்தார். தற்போது அவரது மூன்றாவது தமிழ்த் திரைப்படமான ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரையரங்கு வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

தமிழக வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய லட்சுமிகாந்தன் கொலை வழக்கை நினைவூட்டும் இந்தத் தலைப்பே ரசிகர்களிடையே ஆரம்பத்திலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியது. சமீபத்தில் வெளியான டிரெய்லர் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நிலையில், சென்னை நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் திரைப்படம் முன்வைக்கும் பார்வை குறித்து இயக்குநர் தயாள் பத்மநாபன் விரிவாகப் பேசினார். அவரது கருத்துகள் தற்போது பரவலான விவாதத்திற்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளன.

டிரெய்லரின் அடிப்படையில், நடிகர் வெற்றி ஏற்றுள்ள கதாபாத்திரம் முதலில் ஒரு திருடனாக அறிமுகமாகிறது. பின்னர் எதிர்பாராத விதமாக ஒரு கொலை வழக்கில் சிக்கி, இறுதியில் மரண தண்டனை விதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இந்தக் கதையின் மூலம் இரண்டு மாறுபட்ட கோணங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒன்று, அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நியாயமற்றது என்ற கருத்து; மற்றொன்று, இந்திய சட்டம் அனைவருக்கும் சமமானது, குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு.

இந்தச் சூழலில் இயக்குநர் தயாள் பத்மநாபன் தனது கருத்தைப் பகிர்ந்தபோது, “ஒரு குற்றவாளிக்கு திருந்துவதற்கு எத்தனை வாய்ப்புகள் வேண்டுமானாலும் வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். இந்தக் கருத்து மன்னிப்பு மற்றும் மறுவாழ்வு குறித்த சமூக விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது.

பசியால் அல்லது வறுமையால் ஒருவர் திருடினால் அவருக்கு மறுவாய்ப்பு வழங்கலாம் என்ற எண்ணம் சமூகத்தில் இருக்கலாம். ஆனால், பாலியல் வன்கொடுமை, ஆணவக் கொலை போன்ற திட்டமிட்ட கொடூர குற்றங்களுக்கும் அதே அணுகுமுறையா என்ற கேள்வியையும் படம் மறைமுகமாக எழுப்புகிறது. குற்றவாளியின் பார்வையை மட்டும் முன்வைக்காமல், சிறை அதிகாரி கதாபாத்திரத்தின் மூலம் எதிர்மறையான சட்டப் பார்வையும் படத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரு கருத்துகளுக்கும் இடையேயான மோதல் எவ்வாறு முடிவடைகிறது என்பது படம் வெளியான பிறகே தெரியவரும்.

இதன் காரணமாக, ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே மட்டுமல்லாமல், சட்ட நிபுணர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையிலும் விவாதத்தை ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

2M சினிமாஸ் சார்பில் கே.வி. சபரீஷ் தயாரித்துள்ள இப்படத்தில் வெற்றி, பிரிகிடா சாகா, கவிதா பாரதி, ரங்கராஜ் பாண்டே, சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எம்.வி. பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். திரைக்கதை மற்றும் வசனங்களை தயாள் பத்மநாபன் மற்றும் கவிதா பாரதி இணைந்து எழுதியுள்ளனர். பூபதி வேதகிரிபடத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.

D Pictures நிறுவனத்தின் சார்பில் தயாள் பத்மநாபன் இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ள இந்த திரைப்படம், அவரது கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படம் ஜூலை 10 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Comments (0)
Add Comment