‘திருக்குறள்’ இரண்டாம் பாகம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடக்கம்… சர்வதேச பார்வையாளர்களை இலக்காகக் கொண்ட புதிய முயற்சி!

‘காமராஜ்’, ‘வெல்கம் பேக் காந்தி’ போன்ற திரைப்படங்களைத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், கடந்த ஆண்டு ‘திருக்குறள்’ திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டது. இயக்குநர் A.J. பாலகிருஷ்ணன் இயக்கிய அந்தப் படம் பத்திரிகைகள் மற்றும் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றதோடு, இணைய தளங்களிலும் பல லட்சம் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டது.

அந்த வெற்றியைத் தொடர்ந்து, முதல் பாகத்தில் இடம்பெறாத பல முக்கியமான கருத்துகளையும், திருவள்ளுவர் காலத்தின் வரலாற்று மற்றும் பண்பாட்டு பின்னணியையும் விரிவாகப் பதிவு செய்யும் வகையில் ‘திருக்குறள்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகிறது. இந்தப் படம் சர்வதேச அளவில் “Once Upon a Time in Hindustan” என்ற ஆங்கிலத் தலைப்பில் தயாராகிறது.

முதல் பாகத்தில் திருவள்ளுவராக நடித்த கலைச்சோழனும், வாசுகியாக நடித்த தனலட்சுமியும் இரண்டாம் பாகத்திலும் தங்களது கதாபாத்திரங்களைத் தொடர்கிறார்கள். மேலும் பல முன்னணி நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

VIT வேந்தரும், தமிழியக்கம் தலைவருமான டாக்டர் ஜி. விசுவநாதன் வழங்கும் இப்படத்தை ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் T.P. ராஜேந்திரனும் இந்தப் படைப்பில் இணைந்துள்ளார். முதல் பாகத்திற்கு ஒளிப்பதிவு செய்த எட்வின் சகாய், இந்தப் படத்திற்கும் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

படம் குறித்து இயக்குநர் A.J. பாலகிருஷ்ணன் கூறுகையில், “அருட்தந்தை G.U. Pope திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிறகே உலகளவில் திருக்குறளுக்கு பெரும் கவனம் கிடைத்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் ரோம், கிரேக்கம் போன்ற மேற்கத்திய நாடுகளுடனும், சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளுடனும் வணிக மற்றும் கலாச்சாரத் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சங்ககால நாகரிகத்தையும், திருவள்ளுவர் காலத்தில் வாழ்ந்த பல ஆளுமைகளையும் இந்தப் படம் பதிவு செய்யும்” என்றார்.

மேலும், உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் ஹாலிவுட் கலைஞர்களின் பங்களிப்பும், நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமும் இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தமிழர் பண்பாடு மற்றும் திருக்குறளின் பெருமையை உலக அரங்கில் மேலும் வலியுறுத்துவதே இப்படத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ‘திருக்குறள்’ இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு இன்று பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கியது. V.G. சந்தோஷம் முதல் காட்சிக்கான கிளாப் போர்டை அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். T.P. ராஜேந்திரன் கேமராவை இயக்கி முதல் ஷாட்டை ஆரம்பித்து வைத்ததன் மூலம் படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

Comments (0)
Add Comment