காதல், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஃபீல் மை லவ்’ (Feel My Love) திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் தயாராகி வருகிறது.
பல தமிழ் திரைப்படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்ததுடன், பல பான் இந்தியா படங்களை வெற்றிகரமாக வெளியிட்ட தயாரிப்பாளர் ஏ.என். பாலாஜி, முதன்முறையாக தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமாகும் திரைப்படம் இதுவாகும்.
இப்படத்தில் எம்.எஸ். பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ், பிரியங்கா மற்றும் மதுசூதனன் ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘ஹவுஸ் மேட்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ஒளிப்பதிவாளர் எம்.எஸ். சதீஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையை ராஜரவிவர்மா எஸ் மற்றும் பாலசுப்ரமணியன் ஜி இணைந்து அமைத்துள்ளனர். ‘லவ்’, ‘கொலை சேவல்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், பல முக்கிய விளம்பரப் படங்களிலும் பணியாற்றிய அஜய் மனோஜ்படத்தொகுப்பை கவனிக்கிறார். கதையை எழுதி இயக்கியுள்ளார் ஹரி பிரகாஷ் எம்.
“வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம்” என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், காதல், நகைச்சுவை, இயல்பான மனித உறவுகள், உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒரு வித்தியாசமான திரை அனுபவமாக இருக்கும் என்று இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் இதமான கதைக்களமும், விறுவிறுப்பான திரைக்கதையும் இளைஞர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களையும் சமமாக கவரும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.
‘ஃபீல் மை லவ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மூனாரின் அழகிய மலைப்பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள இப்படம், இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களை சென்றடையும் வகையில் உருவாகி வருகிறது. இதற்கிடையில், திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.