தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையிலும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி முன்னிலையிலும், திரைப்பட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் ஜூன் 30, 2026 அன்று சென்னை அக்கார்டு ஹோட்டலில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் இணைந்துள்ள 23 தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்று, தொழிலாளர்களின் நலனையும் தயாரிப்பாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
ஆலோசனையின் முடிவில், தமிழ் திரைப்படத் துறையில் புதிய முயற்சியாக, திரைப்படங்களை சிறிய பட்ஜெட், மத்திம பட்ஜெட் மற்றும் பெரிய பட்ஜெட் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி, அதற்கேற்ப தொழிலாளர்களுக்கான சம்பள நிர்ணயத்தை மேற்கொள்ள அனைத்து தரப்பினரும் ஒருமனதாக முடிவு செய்தனர். இந்த புதிய நடைமுறை, தயாரிப்பாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் சுமை ஏற்படாத வகையில் சமநிலையை உருவாக்கும் என்பதுடன், இந்திய திரைப்படத் துறைக்கே முன்னுதாரணமாக அமையும் எனக் கூட்டத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் கலைப்புலி எஸ். தாணு, துணைத் தலைவர் எஸ். கமலக்கண்ணன், செயலாளர்கள் எஸ். கதிரேசன் மற்றும் ஆர். ராதாகிருஷ்ணன், பொருளாளர் என். சுபாஷ் சந்திர போஸ், இணைச் செயலாளர் சுஜாதா விஜயகுமார், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி. சிவா, பொருளாளர் தனஞ்செயன், சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள், இயக்குநர்கள் ஆர்.வி. உதயகுமார் மற்றும் பேரரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.