ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் நன்றி அறிவிப்பு விழா சென்னையில் உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்புக்கும் பாராட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். மேலும், படத்தின் உருவாக்கப் பயணம், ரசிகர்களின் வரவேற்பு மற்றும் திரைப்படம் சொல்ல வந்த கருத்து குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் ஆண்டனி பேசுகையில், ‘அங்கீகாரம்’ படத்தின் வசனங்கள், கதைக்களம் மற்றும் கிராமப்புற விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்களை உணர்வுபூர்வமாக பதிவு செய்திருப்பதை பாராட்டினார். விளையாட்டு வீரர்கள் மட்டுமல்ல, அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது என்றும், ஜிப்ரானின் இசை, பீட்டர் ஹெய்னின் சண்டைக் காட்சிகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் பங்களிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதாக கூறினார்.
நடிகை இசபெல்லா, இந்தப் படம் தனது திரைப்பயணத்தின் முக்கிய அடையாளமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். இயக்குநர் தென்பாதியான் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், ‘தங்கமயில்’ கதாபாத்திரத்தில் நடித்த அனுபவம் மறக்க முடியாதது என்றும், படக்குழுவினரின் ஒத்துழைப்பால் சிறந்த அனுபவம் கிடைத்ததாக கூறினார்.
நடிகை வசுந்தரா, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தேவையற்ற சினிமாத்தனங்களை தவிர்த்து, வாழ்க்கைக்கு நெருக்கமான கதையை இயக்குநர் திரையில் கொண்டு வந்திருப்பதாக பாராட்டினார். கே.ஜெ.ஆரின் அர்ப்பணிப்பு, ஜிப்ரானின் இசை மற்றும் தயாரிப்பாளர்களின் துணிச்சலான முயற்சியையும் அவர் பாராட்டினார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான், படத்திற்கு ஊடகங்கள் அளித்த ஆதரவு மிகப்பெரிய பலமாக இருந்ததாக கூறினார். சமூகப் பொறுப்புள்ள கதைகளை தொடர்ந்து தேர்வு செய்து வரும் கே.ஜெ.ஆரை பாராட்டிய அவர், மனித உணர்வுகளை இயல்பாக பதிவு செய்த இயக்குநரின் எழுத்து இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் என்றும், இரண்டாவது வாரத்திலும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
சண்டைப் பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன், புதுமுக ஹீரோ கே.ஜெ.ஆர் இந்தக் கதாபாத்திரத்திற்காக எடுத்த கடின உழைப்பை பாராட்டினார். ஒரு தடகள வீரராக இயல்பாகத் தோன்றுவதற்காக அவர் மேற்கொண்ட உடல்மாற்றமும் அர்ப்பணிப்பும் சிறப்பானது என்றும், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை உண்மைக்கு நெருக்கமாக பதிவு செய்த இயக்குநருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
ஒளிப்பதிவாளர் ஏ. விஸ்வநாத், இயக்குநர் தென்பாதியான் ஒவ்வொரு காட்சியையும் தெளிவாக திட்டமிட்டு பணியாற்றியதால் படத்திற்கு தனித்துவமான காட்சியமைப்பு கிடைத்ததாக கூறினார். பீட்டர் ஹெய்ன், ஜிப்ரான் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியதாகவும் தெரிவித்தார்.
படத்தொகுப்பாளர் தினேஷ்குமார், இயக்குநர் தனது மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்து, ஸ்போர்ட்ஸ் காட்சிகளை இயல்பாகவும், சினிமாத்தனமின்றியும் வடிவமைக்க தொழில்நுட்பக் குழுவினர் இணைந்து பணியாற்றியதாக கூறினார்.
இயக்குநர் தென்பாதியான், இந்தக் கதையை திரைப்படமாக்க பல கட்ட சவால்களை சந்தித்ததாகவும், இறுதியில் கே.ஜெ.ஆர் இந்தக் கதையில் நடிக்க முன்வந்த பிறகே படம் முழுமையான வடிவம் பெற்றதாகவும் கூறினார். கதாநாயகனின் உழைப்பு, தொழில்நுட்பக் குழுவின் அர்ப்பணிப்பு மற்றும் ஊடகங்களின் ஆதரவு தான் இன்று படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு முக்கிய காரணம் என்றும், அடுத்தடுத்த வாரங்களிலும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தயாரிப்பாளர் அருள் முருகன், நடிகர் கே.ஜெ.ஆரின் அர்ப்பணிப்பு மற்றும் இயக்குநரின் எழுத்து மீது வைத்த நம்பிக்கையால்தான் இந்தப் படம் உருவானதாக தெரிவித்தார். தொழில்நுட்பக் குழுவின் ஒத்துழைப்பை பாராட்டிய அவர், இந்தப் படத்தை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்க ஊடகங்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
தயாரிப்பாளர் அஜித் பாஸ்கர், இயக்குநர் தென்பாதியான் இந்தக் கதைக்காக பல ஆய்வுகள் செய்து, விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை ஆழமாகப் புரிந்துகொண்டு திரைக்கதையை உருவாக்கியதாக கூறினார். படக்குழுவின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்பே படத்தின் பலம் என்றும் தெரிவித்தார்.
தயாரிப்பாளர் மற்றும் நடிகர் கே.ஜெ.ஆர், ரசிகர்கள் டிக்கெட் வாங்கி படம் பார்த்து ஆதரவு அளித்தது தனது வாழ்க்கையின் மிகப்பெரிய அங்கீகாரம் என நெகிழ்ச்சியுடன் கூறினார். ஆரம்பத்தில் பலரும் இந்த முயற்சியை சந்தேகத்துடன் பார்த்ததாக குறிப்பிட்ட அவர், தற்போது ரசிகர்களின் வரவேற்பு அதிகரித்து வருவதாகவும், அந்த வெற்றிக்கு முழு காரணம் இயக்குநர் தென்பாதியான் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் உழைப்பே என்றும் தெரிவித்தார். “இன்னும் பத்து ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்வேன்; என்னை நம்பிய தயாரிப்பாளர்களை வெற்றி பெறச் செய்வேன்” என்ற அவரது நம்பிக்கையான பேச்சு விழாவில் கவனம் பெற்றது.
ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள ‘அங்கீகாரம்’திரைப்படத்தை பா.ரஞ்சித்தின் முன்னாள் உதவி இயக்குநரான தென்பாதியான் இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அங்கீகாரத்திற்காக போராடும் ஒரு தடகள வீரனின் வாழ்க்கையையும், நீதிக்காக அவர் மேற்கொள்ளும் சட்டப் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.
விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏ. விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பு, ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு மற்றும் ஷெரீப் நடன அமைப்பை கவனித்துள்ளனர்.
வெளியான முதல் வாரத்திலேயே ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றுள்ள ‘அங்கீகாரம்’, தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதுடன், இரண்டாவது வாரத்திலும் நல்ல ஆதரவைப் பெற்று தனது வெற்றிப் பயணத்தை தொடர்கிறது.