பெரிய அறிவிப்புகளை விட பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கும் சில கூட்டணிகள் மட்டுமே இருக்கும். அந்த வரிசையில், முன்னணி நடிகை சமந்தா மற்றும் சோனி லிவ் தமிழ் (Sony LIV Tamil) இணைந்துள்ள புதிய கூட்டணி தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026-ம் ஆண்டு சமந்தாவின் திரைப்பயணத்தில் புதிய தொடக்கங்களின் ஆண்டாக அமைந்துள்ளது. வழக்கமான பாதையைத் தேர்வு செய்யாமல், புதிய சவால்களையும், வித்தியாசமான முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வரும் அவர், தற்போது தனது கலைப் பயணத்தில் மேலும் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மட்டுமல்லாமல், வெற்றிகரமான தொழிலதிபராகவும் திகழும் சமந்தா, சவாலான கதாபாத்திரங்களையும், வித்தியாசமான படைப்புகளையும் தேர்வு செய்வதில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். அவரது ஒவ்வொரு புதிய அறிவிப்பும் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறிவரும் நிலையில், சோனி லிவ் தமிழுடனான இந்த கூட்டணியும் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த புதிய புராஜெக்ட் தொடர்பான விவரங்கள் தற்போது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தரமான மற்றும் வித்தியாசமான உள்ளடக்கங்களை வழங்கி வரும் சோனி லிவ் தமிழின் அணுகுமுறையும், சமந்தாவின் தனித்துவமான திரை ஆளுமையும் இணைவதால், ரசிகர்களுக்கு புதுமையான மற்றும் மறக்க முடியாத பொழுதுபோக்கு அனுபவம் காத்திருக்கிறது என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த கூட்டணி குறித்து நடிகை சமந்தா கூறுகையில், “மாற்றங்களை ஏற்றுக்கொள்ளவும், புதிய தொடக்கங்களை வரவேற்கவும் இந்த ஆண்டு எனக்குக் கற்றுக் கொடுத்துள்ளது. சோனி லிவ் தமிழுடன் இணைந்து இந்த புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் சுவாரஸ்யமான ஒரு புராஜெக்ட்டிற்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். அதன் முழு விவரங்களையும் மிக விரைவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்” என்றார்.
இந்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சமந்தா – சோனி லிவ் தமிழ் கூட்டணியில் உருவாகும் புதிய படைப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.