இசைஞானி இளையராஜாவின் குடும்பத்தில் இருந்து புதிய ஹீரோ… ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ மூலம் அறிமுகமாகும் ஜெயன்!

இசைஞானி இளையராஜாவின் குடும்பத்தில் இருந்து தமிழ் திரையுலகிற்கு மேலும் ஒரு புதிய முகம் அறிமுகமாகிறது. இளையராஜாவின் இசைப் பயணத்தின் ஆரம்பகாலத்தில் முக்கிய பக்கபலமாக இருந்த அவரது மூத்த சகோதரரும், முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி. பாஸ்கரின் இளைய மகன் ஜெயன், ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

காதலை மையமாகக் கொண்ட இசை உணர்வுகள் நிறைந்த திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தை, எலிபென்டைன் எக்ஸ் நிறுவனம் சார்பில் ரமணன் பாலகங்காதரன் தயாரிக்கிறார். ஜெயனின் அறிமுகத்தை முன்னிட்டு, திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, நீண்டகால நட்பின் அடிப்படையில் இப்படத்தில் இணைந்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இப்படத்திற்கு கதையெழுதியுள்ள நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற இயக்குநர் சுதா கொங்கரா, படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூசராக இணைந்துள்ளார். ‘குடும்பஸ்தன்’ படத்தின் ஒளிப்பதிவாளரான சுஜித் என். சுப்ரமணியம், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

படத்தில் ஜெயனுடன் இணைந்து சோனா ஒலிக்கல், வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் ரமணன் பாலகங்காதரன் கூறுகையில், “தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களாக உணர்வுபூர்வமான இசை மையப்படுத்திய காதல் திரைப்படங்கள் குறைவாகவே வந்துள்ளன. அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ உருவாகி வருகிறது. வெங்கட் பிரபுவின் தனித்துவமான கதை, யுவன் சங்கர் ராஜாவின் மாயாஜால இசை மற்றும் சுதா கொங்கராவின் படைப்பாற்றல் பங்களிப்பு ஆகியவை இப்படத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளன. ரசிகர்களுக்கு தரமான இசை அனுபவத்துடன் கூடிய சிறந்த திரைப்படமாக இது அமையும்” என்றார்.

இப்படத்தின் ஒளிப்பதிவை சாய் முனீஷ் மேற்கொள்கிறார். படத்தொகுப்பை ஸ்ரீ வாட்சன் கவனிக்கிறார். கலை இயக்கத்தை ஷனு முரளிதரன் மேற்கொள்ள, பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். சண்டைக் காட்சிகளை பிசி ஸ்டண்ட்ஸ் வடிவமைக்க, ஒலி வடிவமைப்பை ஆண்டனி பி. ஜெயரூபன் கவனிக்கிறார். விஎஃப்எக்ஸ் பணிகளை செந்தில் குமார் மேற்கொள்கிறார்.

இசை, காதல், நட்பு மற்றும் திறமையான படைப்பாளிகளின் கூட்டணியில் உருவாகி வரும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’, ஜெயனின் திரையுலகப் பயணத்திற்கு சிறப்பான தொடக்கமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு தற்போது திரையுலகில் அதிகரித்துள்ளது.

Comments (0)
Add Comment