வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள ‘கட்டா குஸ்தி 2’திரைப்படம், ஜூலை 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார்.
படத்தின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் வகையில், நடிகர் விஷ்ணு விஷாலும் இயக்குநர் செல்லா அய்யாவும் தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு நேரில் சென்று ரசிகர்களை சந்தித்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரைக்கு சென்றிருந்த படக்குழுவினர், நடிகர் சூரி நடத்தி வரும் “அம்மன்” உணவகத்தில் மதிய உணவருந்தினர். அப்போது சூரி, வீடியோ கால் மூலம் விஷ்ணு விஷாலும் இயக்குநர் செல்லா அய்யாவுடனும் உற்சாகமாக உரையாடி, படத்தின் வெற்றிக்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
“படத்தின் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஊரே இந்தப் படத்தை கொண்டாடுகிறது. படக்குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று சூரி கூறியதாக படக்குழு தெரிவித்துள்ளது. நீண்ட நாள் நண்பர்களான விஷ்ணு விஷாலும் சூரியும் பகிர்ந்து கொண்ட அந்த அன்பான தருணம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்ததோடு, ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விஷ்ணு விஷால்–சூரி நட்பை வெளிப்படுத்தும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தில் முதல் பாகத்தில் ரசிகர்களின் மனதை கவர்ந்த ஜோடியான விஷ்ணு விஷாலும் ஐஸ்வர்யா லட்சுமியும் மீண்டும் இணைந்துள்ளனர். இவர்களுடன் கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ்உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், குழந்தை நட்சத்திரம் ஜாரா முக்கியமான பாத்திரத்தில் இடம்பெற்றுள்ளார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனலுடன் இணைந்து, முதல் பாகத்தை தயாரித்த விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ், இந்த இரண்டாம் பாகத்தையும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. சுப்ரா, ஆர்யன் ரமேஷ் மற்றும் இஷான் சக்சேனாஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கட்டா குஸ்தி 2’, ரசிகர்களின் ஆதரவால் தொடர்ந்து வெற்றிப் பயணத்தை மேற்கொண்டு வரும் நிலையில், படக்குழுவினர் ரசிகர்களுக்கு நேரில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகளையும் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.