நடிகராக அறிமுகமாகி, தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களை வழங்கி தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நட்சத்திரமாக உயர்ந்துள்ள பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராக புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். அவரது தயாரிப்பில் உருவாகும் #PRS01 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிமுகக் காணொளி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தின் மூலம், பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய ஆறு பேர் இணைந்து ‘தி ஆல்ஃபா யூனிட்’ (The Alpha Unit) என்ற பெயரில் இயக்குநர்களாக அறிமுகமாகின்றனர். பெண்மையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்தில், தென்னிந்தியாவின் இளம் நட்சத்திர நடிகை மமீதா பைஜுகதாநாயகியாக நடிக்கிறார்.
மமீதா பைஜுவுடன் அஸ்வத் மாரிமுத்து, சிவாஜி சொன்டினேனி, சுவாசிகா, அனாமிகா மகி, லிசி ஆண்டனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்இசையமைக்கிறார். பிரதீப் ராகவ் படத்தொகுப்பை கவனிக்கிறார். பி.ஆர். ஷோ (PR Show) நிறுவனம் சார்பில், கதையை எழுதியுள்ள பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளராக இப்படத்தை உருவாக்கி வருகிறார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படம் தற்போது #PRS01 என்ற தற்காலிக தலைப்பில் தயாராகி வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிமுகக் காணொளி, அதன் வித்தியாசமான கான்செப்ட், நட்சத்திரங்களின் திரைத் தோற்றம் மற்றும் பின்னணி இசையால் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
இயக்குநராகவும், நடிகராகவும் வெற்றியைப் பதிவு செய்த பிரதீப் ரங்கநாதன், தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியிருப்பதோடு, பெண்களை மையமாகக் கொண்ட கதைக்களத்தை தேர்வு செய்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மேலும், ‘டிராகன்’ படத்திற்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஸ்வத் மாரிமுத்து மீண்டும் இணைந்திருப்பதும், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வரும் அஸ்வத் மாரிமுத்து இந்தத் திட்டத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இடம்பெற்றிருப்பதும் ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
அறிமுகக் காணொளி வெளியான நிலையில், #PRS01 திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தலைப்பு குறித்த அறிவிப்பை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.