இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான கோபாலசாமி துரைசாமி நாயுடு (ஜி.டி. நாயுடு) அவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஜி.டி.என்’ திரைப்படத்தின் டிரெய்லர், கோயம்புத்தூரில் உள்ள புகழ்பெற்ற கரி மோட்டார் ஸ்பீட்வேயில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. பாரம்பரியம், ஆட்டோமொபைல், தொழில்நுட்பம் மற்றும் சினிமாவை ஒருங்கிணைத்த இந்த வித்தியாசமான நிகழ்வு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
ஆர். மாதவன் ஜி.டி. நாயுடுவாக நடித்துள்ள இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம், இந்திய தொழில்துறை வரலாற்றின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரின் வாழ்க்கையை திரையில் பதிவு செய்கிறது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், ஜி.டி. மியூசியத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய விண்டேஜ் கார்களில் தயாரிப்பாளர்கள், இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் வருகை தந்தனர். ஜி.டி. நாயுடுவின் ஆட்டோமொபைல் துறைக்கான பங்களிப்பை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த அணிவகுப்புடன், அதிநவீன சொகுசு சூப்பர் கார்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்வின் முக்கிய அம்சமாக, மணிக்கு சுமார் 190 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய சூப்பர் காரில் நடிகர் ஆர். மாதவன், முன்னணி ஊடகப் பத்திரிகையாளர்களை கரி மோட்டார் ஸ்பீட்வேயை சுற்றி அழைத்துச் சென்றார். சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்ற இந்த அதிவேக அனுபவம், ஜி.டி. நாயுடுவின் ஆட்டோமொபைல் மீதான ஆர்வத்தையும் புதுமைச் சிந்தனையையும் நினைவூட்டும் வகையில் அமைந்தது.
சுமார் மூன்று நிமிடங்கள் ஓடும் டிரெய்லர், ஜி.டி. நாயுடுவின் விடாமுயற்சி, கண்டுபிடிப்பு திறன், தேசப்பற்று மற்றும் வரலாற்றுச் சாதனைகளை உணர்வுபூர்வமாக சித்தரிக்கிறது. அந்தக் காலகட்டத்தை நுணுக்கமாக மீட்டெடுத்த காட்சிகள், பிரம்மாண்டமான தயாரிப்பு தரம் மற்றும் ஆர். மாதவனின் அசத்தலான தோற்றம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. மேலும், தந்தை பெரியார் மற்றும் அடால்ஃப் ஹிட்லர் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆளுமைகளின் காட்சிகளும் டிரெய்லரில் இடம்பெற்றிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
நிகழ்வில் பேசிய நடிகர் ஆர். மாதவன், “ஜி.டி. நாயுடு ஒரு கண்டுபிடிப்பாளர் மட்டுமல்ல; தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர், அசாதாரண சாதனையாளர் மற்றும் மிகப்பெரிய தேசபக்தர். அவரது வாழ்க்கையும் சாதனைகளும் இந்தியா முழுவதும் அறியப்பட வேண்டியவை. அந்த நோக்கத்தில்தான் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது,” என்றார்.
நடிகை துஷாரா விஜயன், “பள்ளி நாட்களில் ஜி.டி. மியூசியத்திற்கு சென்றிருக்கிறேன். பின்னாளில் ஜி.டி. நாயுடுவின் மனைவியாக திரையில் நடிப்பேன் என்று நினைத்ததே இல்லை. இந்த திரைப்படம் அவரது கண்டுபிடிப்புகளை மட்டுமல்ல, மனிதநேயமும் அன்பும் நிறைந்த அவரது ஆளுமையையும் உலகிற்கு அறிமுகப்படுத்தும்,” என்று தெரிவித்தார்.
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார், “ஒரு புத்தகக் கண்காட்சியில் ஜி.டி. நாயுடுவைப் பற்றிய புத்தகத்தைப் படித்ததே இந்த திரைப்படத்தின் தொடக்கப்புள்ளி. அவரது சாதனைகளும், யாரும் அறியாத வாழ்க்கைப் போராட்டங்களும் என்னை மிகவும் பாதித்தன. அந்த வாழ்க்கையை பெரிய திரையில் பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணமே இந்தப் படத்தை உருவாக்கியது,” என்றார்.
இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் வர்கீஸ் மூலன், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் நம்பி நாராயணன், ஜி.டி. ராஜ்குமார், மறைந்த ஜி.டி. நாயுடுவின் மகன் ஜி.டி. கோபால், திரையுலக பிரபலங்கள் மற்றும் ஊடகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
ஆர். மாதவனுடன் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, நந்தலால், டி.ஜே. அருணாசலம், ஷீலா, கருணாகரன், முரளிதரன், அதிதி பாலன், மோகன் ராமன், கனிகா, ரமேஷ் திலக், கார்ல் ஆண்ட்ரூ ஹார்டே, ரிச்சர்ட் பக்தி கிளைன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரைக்கதையை கிருஷ்ணகுமார் ராமகுமார் மற்றும் ஆர். மாதவன் இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அரவிந்த் கமலநாதன் ஒளிப்பதிவு மற்றும் கிரியேட்டிவ் புரொட்யூசராகவும், கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராகவும், பிஜித் பாலா படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
தேசிய விருது பெற்ற ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்திற்குப் பிறகு, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் டிரைகலர் ஃபிலிம்ஸ் மீண்டும் இணைந்துள்ள இந்த திரைப்படம், இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் முயற்சியாக உருவாகியுள்ளது.
உணர்வுபூர்வமான டிரெய்லர், பிரம்மாண்டமான தயாரிப்பு தரம் மற்றும் வரலாற்று சிறப்புமிக்க கதைக்களம் ஆகியவற்றால் ‘ஜி.டி.என்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.