இந்திய இலக்கிய உலகின் உயரிய அங்கீகாரங்களில் ஒன்றான 60வது ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்குவழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற சிறப்புவிழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் கரண் சிங் விருதை வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்வில் ஞானபீட அமைப்பின் நிர்வாக அறங்காவலர் அகிலேஷ் ஜெயின், ஸ்ரீ முதத் ஜெயின், தேர்வுக்குழுத் தலைவர் டாக்டர் பிரதிபா ராய், ஆர்.என். திவாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விருதைப் பெற்றுக்கொண்ட பின்னர் உரையாற்றிய கவிஞர் வைரமுத்து, தனது வாழ்க்கைப் பயணத்தை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார். தமிழகத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருந்த மெட்டூர் என்ற சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்ததாகவும், வைகை அணை கட்டுமானத்தால் இடம்பெயர்ந்த குடும்பத்தின் மகனாக வளர்ந்ததாகவும் கூறினார்.
“நீரில் மூழ்கிய கிராமத்திலிருந்து தாய் கைப்பிடித்துக் கொண்டு கரையேறிய சிறுவன்தான் இன்று ஞானபீட மேடையில் நிற்கிறான்” என்று அவர் உணர்ச்சிகரமாக தெரிவித்தார்.
வடுகபட்டியில் கல்வி கற்ற காலத்தை நினைவுகூர்ந்த அவர், “வகுப்பறை எனக்கு எழுத்துக்களை கற்றுக் கொடுத்தது; வறுமை வாழ்க்கையை கற்றுக் கொடுத்தது. இரண்டும் என்னை கவிதையிடம் கொண்டு வந்து சேர்த்தன” என்றார்.
இலக்கியத்தின் சக்தியைப் பற்றி பேசிய அவர், “நல்லது காண்பது இலக்கியம்; நம்பிக்கையூட்டுவது இலக்கியம். ‘விரும்பியது அமையாவிட்டால் அமைந்ததை விரும்பு’ என்கிறது உபநிஷத்; ‘அமைந்ததை விரும்பாவிட்டால் விரும்பியதை அமை’ என்கிறது இலக்கியம்” என்று குறிப்பிட்டார்.
ஞானபீட விருது தனக்கே சொந்தமானது அல்ல என்றும், தமிழ் மற்றும் உலக இலக்கிய மேதைகளின் பங்களிப்புகளால் தான் இந்த உயரத்தை அடைந்ததாகவும் கூறினார். திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், பாரதி, பாரதிதாசன், அண்ணா, கலைஞர், கண்ணதாசன் உள்ளிட்ட தமிழறிஞர்களுக்கும், காளிதாசன், வேதவியாசர், வால்மீகி, தாகூர், ஷேக்ஸ்பியர், கலீல் ஜிப்ரான் உள்ளிட்ட உலக இலக்கிய ஆளுமைகளுக்கும் இந்த அங்கீகாரத்தின் பெருமையை அர்ப்பணித்தார்.
மேலும், “இந்த விருது என்னை ஒரு சாய்வு நாற்காலியில் சாய்த்துவிடாது. இது ஓடிவந்த குதிரைக்கு நீட்டப்படும் புல் அல்ல; குதிரை மீது விழுந்த இன்னுமொரு சாட்டையடி. குதிரை இன்னும் வேகமெடுக்கும்; நான் வெறிகொண்டு ஓடுவேன்” என்று கூறி அரங்கில் கரவொலியை பெற்றார்.
தனது உரையின் இறுதியில் இந்திய இலக்கியத்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளையும் முன்வைத்தார். ரவீந்திரநாத் தாகூருக்குப் பிறகு இந்தியா இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெறாததைக் குறிப்பிட்டு, “நோபல் பெறத் தகுதியான படைப்பாளிகளை இந்தியா உருவாக்கவில்லையா? அல்லது உலகம் அவர்களை கண்டுபிடிக்கவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தொழில்நுட்பக் கல்விக்கென பல பல்கலைக்கழகங்கள் இருக்கும் நிலையில், இலக்கியத்திற்காக தனித்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இறுதியாக, “இந்த விருதுக்கு என்னைத் தகுதிப்படுத்திய ஒவ்வொரு சமூக மனிதருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறி தனது ஏற்புரையை நிறைவு செய்தார்.
இந்திய இலக்கிய வரலாற்றில் முக்கியமான தருணமாக அமைந்த இந்த விழாவில், கவிஞர் வைரமுத்துவின் உரை இலக்கிய உலகினரிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.