தென்னிந்திய திரைப்படத் துறையின் வளர்ச்சி, தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் திரைப்படத் துறை சார்ந்த பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து, மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி தலைமையில் தயாரிப்பாளர்களுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 16, 2026) சென்னையில் நடைபெற்றது.
சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையேற்றார். துணைத் தலைவர்கள் கமலக்கண்ணன், ஆர்.கே. சுரேஷ், செயலாளர் கதிரேசன், பொருளாளர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் கூட்டத்தில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், மேலும் பல்வேறு தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், திரைப்படத் துறையின் தற்போதைய நிலை, தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தென்னிந்திய திரைப்படத் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சி, மத்திய அரசின் ஆதரவு மற்றும் திரைத்துறை முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிந்துரைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் நான்கு மாநிலங்களைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் ஒரே மேடையில் ஒன்றுகூடி மத்திய அமைச்சருடன் நேரடியாக கலந்துரையாடிய இந்தச் சந்திப்பு, திரைப்படத் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கான முக்கியமான ஆலோசனைக் கூட்டமாக அமைந்தது.