மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த மர்டர் மிஸ்ட்ரி கதைகளுக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த வரிசையில், விறுவிறுப்பான துப்பறியும் த்ரில்லராக உருவாகி வரும் ‘மாறுவேஷம்’திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்று (ஜூலை 14, 2026) வெளியிட்டுள்ளது.
ஒனிரோமான்சி பிக்சர்ஸ் பேனரின் கீழ், மங்கி மேன் கம்பெனியுடன் இணைந்து விஜய் ஆனந்த் மற்றும் நடிகர் வைபவ் தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குநர் ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார். குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய துப்பறியும் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம், பரபரப்பான திருப்பங்களும், மறைக்கப்பட்ட ரகசியங்களும் நிறைந்த கதையைக் கொண்டதாக உருவாகியுள்ளது.
படத்தில், சவாலான வழக்குகளைத் தீர்ப்பதில் ஆர்வம் கொண்ட காவல்துறை அதிகாரி திலக் கதாபாத்திரத்தில் நடிகர் வைபவ் நடித்துள்ளார். தனது திறமையை நிரூபிக்கும் வகையிலான வழக்குகள் எதுவும் கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருக்கும் அவரிடம், எதிர்பாராத திருப்பங்கள், அதிர்ச்சியூட்டும் உண்மைகள் மற்றும் பல மர்மங்களை உள்ளடக்கிய ஒரு வழக்கு வருகிறது. அந்த வழக்கின் பின்னணியையும், அதில் மறைந்திருக்கும் உண்மைகளையும் கண்டறியும் துப்பறியும் பயணமே ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது.
படம் குறித்து இயக்குநர் ஸ்ரீனி கூறுகையில், “‘மாறுவேஷம்’ என்ற தலைப்பே படத்தின் மர்மத்தன்மையை வெளிப்படுத்துகிறது. யார் எதை மறைக்கிறார்கள், ஏன் ஒரு கதாபாத்திரம் மாறுவேஷம் எடுக்க வேண்டிய சூழல் உருவாகிறது, அது வெறும் வெளிப்புற மாற்றமா அல்லது உணர்வுப்பூர்வமான பயணமா, பழிவாங்கலா, உயிர் பிழைப்பதற்கான போராட்டமா அல்லது கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முயற்சியா என்பது படத்தின் சுவாரஸ்யமான அம்சங்களாக இருக்கும். இரட்டை முகங்கள், மறைக்கப்பட்ட ரகசியங்கள் மற்றும் இரண்டு அடையாளங்களுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் ஒரு மனிதனின் வாழ்க்கையை இப்படம் பேசுகிறது. ‘முகம் மாறலாம்… ஆனால் கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முடியுமா?’ என்பதே படத்தின் முக்கிய கேள்வி,” என்றார்.
இப்படத்தில் வியானா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராம்கி, முனிஷ்காந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன், ஜார்ஜ் விஜய், இந்துமதி, மு. ராமசாமி மற்றும் செல் முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாலாஜி கே. ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராஜ்குமார் அமல் இசையமைத்துள்ளார். என்.பி. ஸ்ரீகாந்த்படத்தொகுப்பையும், மணிகண்டன் சீனிவாசன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். கூடுதல் திரைக்கதையை எஸ். இசையமுதன் எழுதியுள்ளார்.
வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மர்மத் தன்மையையும், த்ரில்லர் அம்சங்களையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளதால், ‘மாறுவேஷம்’ திரைப்படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.