தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் கிஷன் தாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘சி யூ’ (See U)திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி நடிகர் தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீ வட்ஸன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ரொமான்டிக் என்டர்டெய்னரில், கிஷன் தாஸுடன் சஞ்சனா ஏ.கே., எம்.எஸ். பாஸ்கர், அருண்குமார், கார்த்திக் குமார், அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சந்தீப் கே. விஜய் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜெனம் இசையமைத்துள்ளார். சரவணன் வசந்த் கலை இயக்கத்தை கவனித்துள்ள நிலையில், என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஏ.ஆர். என்டர்டெயின்மென்ட் மற்றும் டி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் அஜ்மல் கான் ஹெச்., ரியா மற்றும் விஜய்ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அதன் வடிவமைப்பும் கவனத்தை ஈர்த்துள்ளது. வாழ்க்கையில் ஒரு பார்வை, ஒரு வார்த்தை, ஒரு சிறிய புன்னகை, ஃபுல் ஸ்டாப், கமா, அன்பு, நம்பிக்கை போன்ற சிறிய தருணங்களே மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.
தனுஷ் வெளியிட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில், ‘சி யூ’திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. காதல், உணர்வுகள் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.