இசைப் பயணத்தில் மறக்க முடியாத முக்கிய தருணமாக, பிரபல பாடகர் வேடன், முதல் முறையாக ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் உடன் இணைந்து பாடியிருப்பதாக அறிவித்துள்ளார். வரவிருக்கும் ‘DC’ திரைப்படத்திற்காக இருவரும் இணைந்து பாடிய பாடலின் பதிவு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றுள்ளது.
இந்த அனுபவம் குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள வேடன், கோடிக்கணக்கான ரசிகர்களை தனது இசையால் கவர்ந்த அனிருத்துடன் பணியாற்றியது தனது நீண்ட நாள் கனவு நிறைவேறிய தருணம் என தெரிவித்துள்ளார். ஒவ்வொரு புதிய இசைக் கூட்டணியும் புதிய அனுபவங்களையும் கற்றல்களையும் வழங்கும் என்றும், அந்த வகையில் இந்த வாய்ப்பு தனது இசைப் பயணத்தில் மிகவும் சிறப்பான ஒன்றாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடல் பதிவு நடைபெற்றபோது அனிருத்தின் ஆற்றல், இசையின் மீது கொண்ட ஆர்வம் மற்றும் படைப்பாற்றல் தன்னை மிகவும் ஈர்த்ததாகவும், அந்த ஸ்டுடியோ அனுபவம் என்றும் மறக்க முடியாத நினைவாக இருக்கும் என்றும் வேடன் தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை வழங்கிய ‘DC’ படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ள அவர், தாங்கள் எவ்வளவு உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் இந்தப் பாடலை உருவாக்கினார்களோ, அதே மகிழ்ச்சியுடன் ரசிகர்களும் அதை ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், பாடல் வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகவும், தாங்கள் உருவாக்கிய இந்த இசையை ரசிகர்கள் கேட்கும் தருணத்திற்காக காத்திருக்கிறேன் என்றும் வேடன் தெரிவித்துள்ளார். ராக்ஸ்டார் அனிருத் மற்றும் வேடன் இணைந்துள்ள இந்த புதிய பாடல், இசை ரசிகர்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.