300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை தனது ட்ரோன் ஒளிப்பதிவின் மூலம் ரசிகர்களுக்கு விருந்தாக்கி வரும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளரான எம். அரவிந்த் குமார், தேசிய அளவிலான ட்ரோன் விருதைப் பெற்று மீண்டும் கவனம் பெற்றுள்ளார். 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ள அவர், திரைப்பட உலகிலும் ட்ரோன் தொழில்நுட்பக் கல்வியிலும் தனக்கென தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையில் பணியாற்றி வரும் அரவிந்த் குமார், ‘ஜனநாயகன்’, ‘பீஸ்ட்’, ‘இந்தியன் 2’, ‘LIK’, ‘வேட்டையன்’, ‘பைசன்’, ‘விடுதலை’ உள்ளிட்ட பல முன்னணி தமிழ் திரைப்படங்களிலும், தெலுங்கு உள்ளிட்ட பிறமொழிப் படங்களிலும் ட்ரோன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். திரைப்படங்களுக்காக கதைக்கேற்ற வான்வழி காட்சிகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், உயர்தர ஸ்டாக் ஷாட்களையும் வழங்கி வருவதால், திரையுலகில் ‘ட்ரோன்மேன்’ என்ற பெயரால் பரவலாக அறியப்படுகிறார்.

லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர், பாகிஸ்தானின் South Asian Media School-இன் Fellow ஆகவும் பணியாற்றியுள்ளார். 2014 முதல் 2017 வரை அமெரிக்காவில் பல இந்திய அமைப்புகளின் அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞராக இருந்தபோது ட்ரோன் தொழில்நுட்பத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பே, அவரை இந்தத் துறையில் முழுமையாக ஈடுபடச் செய்தது. பின்னர் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா வழங்கிய ஊக்கத்தின் பேரில், 2017-ஆம் ஆண்டு தமிழ் திரைப்படத் துறையில் ட்ரோன் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தைத் தொடங்கினார்.

திரைப்பட அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு பகிர வேண்டும் என்ற நோக்கத்தில், ZOO Studios Indiaநிறுவனத்தின் கீழ் DroneMan Academy-யை நிறுவியுள்ள அரவிந்த் குமார், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ட்ரோன் பயிற்சிகளை வழங்கி வருகிறார். குறிப்பாக, EDII MediaDrone உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நடத்திய பயிற்சிகள் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்களை ட்ரோன் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் புதுமை நோக்கி வழிநடத்தியுள்ளார்.

சென்னை வண்டலூரில் நவீன ட்ரோன் ஆய்வகத்தை நிறுவியுள்ள அவர், ட்ரோன் வடிவமைப்பு, நிரலாக்கம், செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் மற்றும் சோதனை உள்ளிட்ட அனைத்தையும் மாணவர்கள் நேரடியாக கற்றுக்கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளார். அவரது வழிகாட்டுதலில் பயிற்சி பெற்ற பலர் தற்போது திரைப்படத் துறையிலும், ட்ரோன் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.

அவரது மாணவர்கள் அண்மையில் நடைபெற்ற NIDAR Drone 2025-26 தேசிய அளவிலான போட்டியில் இரட்டை வெள்ளி விருதுகளை வென்று சாதனை படைத்தனர். அந்த வெற்றியை தனது தனிப்பட்ட சாதனையாக அல்லாமல், தமிழக இளைஞர்களின் திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே அரவிந்த் குமார் கருதுகிறார். மேலும், போட்டியில் கிடைத்த பரிசுத் தொகையையும் மீண்டும் DroneMan Academy ஆய்வக வளர்ச்சிக்காக பயன்படுத்த முடிவு செய்திருப்பது அவரது கல்வி அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

இந்த சாதனைகளுக்கு அங்கீகாரமாக, அண்மையில் Drone Federation of India வழங்கிய தேசிய அளவிலான ட்ரோன் விருதால் DroneMan Academy குழு கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றியை தமிழ்நாடு அரசும் பாராட்டியுள்ளது. இதையடுத்து, நடைபெறவுள்ள India’s NIDAR 2.0 தேசிய ட்ரோன் போட்டிக்காக தமிழகத்தின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த 10 அணிகளை தனது அகாடமி மூலம் தயார்படுத்தும் பணியிலும் அவர் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்.

ஒரு சாதாரண ட்ரோன் கேமராமேனாக தொடங்கிய தனது பயணத்தை, இன்று திரைப்படத் துறையிலும் தொழில்நுட்பக் கல்வித் துறையிலும் முன்னணி இடத்தைப் பெறும் அளவுக்கு வளர்த்துள்ள எம். அரவிந்த் குமார், தனது அனுபவத்தை அடுத்த தலைமுறையின் வெற்றியாக மாற்றும் அர்ப்பணிப்புமிக்க வழிகாட்டியாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறார்.

 

Comments (0)
Add Comment