நடிகர்-இயக்குநர் இராதகிருஷ்ணன் பார்த்திபன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்ற P.U. சுப்ரஜாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா!

சென்னை சேத்துப்பட்டில் உள்ள சின்மயா ஹெரிடேஜ் சென்டரில், வாசுதேவன் நாதாலயா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநரான குரு துளசி அவர்களின் மாணவியான P.U. சுப்ரஜாவின் பரதநாட்டிய அரங்கேற்ற விழா, திரையுலக மற்றும் கலைத்துறை பிரபலங்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

ஜே. பிரபாகர் – உதயசந்திரிகா தம்பதியரின் மகளான சுப்ரஜா, கடந்த 15 ஆண்டுகளாக குரு துளசியிடம் பரதநாட்டியம் பயின்று, தனது நீண்டகால கலைப் பயணத்தின் முக்கிய மைல்கல்லான அரங்கேற்ற நிகழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

இந்த விழாவில் தேசிய விருது மற்றும் கலைமாமணி விருது பெற்ற நடிகர், இயக்குநர் இராதகிருஷ்ணன் பார்த்திபன்தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சுப்ரஜாவை வாழ்த்தி பாராட்டினார். மேலும், பரதநாட்டிய உலகின் முன்னணி கலைஞரும் பத்ம பூஷண் விருது பெற்றவருமான சாந்தா தனஞ்செயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது ஆசியை வழங்கினார்.

இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர் வசந்தபாலன், தயாரிப்பாளர்கள் ஆபவாணன், காஜா மொய்தீன், வரதராஜன், நடிகர் இளவரசு, ஒளிப்பதிவாளர்கள் ரத்னவேலு, செல்வகுமார், எழுத்தாளரும் நடிகருமான கவிதா பாரதி உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் நேரில் பங்கேற்று சுப்ரஜாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மேலும், தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநர் பேராசிரியர் டாக்டர் ஜி. செந்தில்வேல் மற்றும் சுங்கத்துறை இணை ஆணையர் டாக்டர் சி. சரண்யா, IRS ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கலைஞர்களை பாராட்டினர்.

குரு துளசியின் நட்டுவாங்கம் மற்றும் நடன அமைப்பில் நடைபெற்ற இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியில், புஷ்பாஞ்சலி முதல் மங்களம் வரை பரதநாட்டியத்தின் பாரம்பரிய நிகழ்ச்சிகள் அழகுற அரங்கேறின. சுப்ரஜாவின் துல்லியமான அசைவுகள், அபிநய வெளிப்பாடு மற்றும் கலைநயம் நிறைந்த நடன நிகழ்ச்சி அரங்கில் இருந்த அனைவரின் பாராட்டையும் பெற்றது.

நிகழ்ச்சிக்கு இசையமைப்பாக தென்காசி சமய்குமார் (வாய்ப்பாட்டு), எஸ்.வி. ரமணன் (மிருதங்கம்), ஆர்.டி. ஜெகதீசன்(வயலின்), நிமல் வர்ஷன் (புல்லாங்குழல்) ஆகியோர் இசை வழங்கினர். ஒப்பனையை கீதா மணிமொழிமேற்கொண்டார்.

திரையுலகம், கலைத்துறை, பரதநாட்டிய உலகம், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்ட இந்த விழா, இளம் கலைஞரின் சாதனையை கொண்டாடியதுடன், பாரம்பரிய கலை மரபை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்லும் அரிய கலை விழாவாக அமைந்தது. கலைநயம், ஆன்மிகம் மற்றும் தமிழர் பண்பாட்டு மரபின் பெருமையை வெளிப்படுத்திய இந்த பரதநாட்டிய அரங்கேற்றம், அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்தது.

Comments (0)
Add Comment