‘காகங்கள்’ ஷூட்டிங் ராப்… யோகி பாபு பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாட்டம்!

மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த அதே நாளில் நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளும் அமைந்ததால், படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி படக்குழுவினர் இரட்டை மகிழ்ச்சியை கொண்டாடினர்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சங்களுக்காக கவனம் பெற்ற ‘காக்கா முட்டை’, ‘குற்றமே தண்டனை’உள்ளிட்ட திரைப்படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை, இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு ஆகிய முக்கிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். பல்வேறு பொறுப்புகளை ஒரே நேரத்தில் கையாண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், அவரது முக்கியமான படைப்புகளில் ஒன்றாக எதிர்பார்க்கப்படுகிறது.

கிஷோர், யோகி பாபு, விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் திரைப்படம், மனித உணர்வுகள், ஆன்மிகத் தேடல் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது டப்பிங், ஒலிவடிவமைப்பு (Sound Design), பின்னணி இசை, விஎஃப்எக்ஸ் (VFX), டிஜிட்டல் இன்டர்மீடியேட் (DI) உள்ளிட்ட இறுதிக்கட்ட பின்னணிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

படத்தின் காட்சியமைப்பு மற்றும் கதையம்சம் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான அனுபவத்தை வழங்கும் முயற்சியாக உருவாகியுள்ள ‘காகங்கள்’, விரைவில் ரசிகர்களை திரையரங்குகளில் சந்திக்கவுள்ளது.

மேலும், திரைப்படத்தின் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள், புதிய போஸ்டர்கள், டீசர் மற்றும் பிற விளம்பரப் பொருட்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment