விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு, ZEE5 தமிழ் தனது அடுத்த முக்கிய குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக **’நூறு சாமி’**யை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உணர்வுபூர்வமான குடும்பக் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், வரும் ஆகஸ்ட் மாதம் ZEE5 OTT தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிரத்யேகமாக வெளியாகிறது. படத்தின் ஸ்ட்ரீமிங் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, ZEE5 தமிழுக்கு வெற்றிகரமான தருணத்தில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் OTT-யில் வெளியான ‘பரிமளா & கோ’ திரைப்படம், குடும்ப பார்வையாளர்களின் அமோக வரவேற்பைப் பெற்று தளத்தின் முக்கிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மாறியது. ஜெயராம் மற்றும் ஊர்வசி நடித்த அந்த திரைப்படம், நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் அனைவரும் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய கதைக்களம் ஆகியவற்றால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், ZEE5 தமிழின் குடும்ப பொழுதுபோக்கு உள்ளடக்கங்களுக்கான நம்பிக்கையையும் மேலும் வலுப்படுத்தியது.
அந்த வெற்றியின் தொடர்ச்சியாக தற்போது ‘நூறு சாமி’ திரைப்படத்தை ZEE5 தமிழ் பார்வையாளர்களிடம் கொண்டு வருகிறது. குடும்பங்களை ஒன்றிணைக்கும் உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம், சமூகத்தில் பெரிதாக பேசப்படாத ஒரு முக்கியமான விஷயத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘நூறு சாமி’, தனது மகனையும் குடும்பத்தையும் முன்னிலைப்படுத்தி பல ஆண்டுகளாக தன்னுடைய வாழ்க்கையை முழுவதுமாக தியாகம் செய்து வாழும் ஒரு விதவைத் தாயின் கதையைச் சொல்கிறது. தனது 40-களின் நடுப்பகுதியில் மீண்டும் திருமணம் செய்து வாழ்க்கைத்துணையைத் தேட வேண்டும் என்ற முடிவை அவர் எடுக்கும் போது, உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் ஒரு தாயின் வாழ்க்கை குடும்பத்தை மட்டுமே சுற்றி இருக்க வேண்டும் என்று நம்பும் சமூகத்தின் எதிர்ப்பை அவர் எதிர்கொள்கிறார்.
இந்தக் கதையின் உணர்வுப்பூர்வமான மையமாக தாய்–மகன் உறவு அமைந்துள்ளது. விஜய் ஆண்டனி நடித்த முந்தைய திரைப்படங்களில் ரசிகர்களை கவர்ந்த தாய்–மகன் உறவுகளைப் போலவே, இந்தப் படமும் ஒரு தாய் தனது வாழ்நாள் முழுவதும் செய்யும் எண்ணற்ற தியாகங்களை வெளிப்படுத்துகிறது. ஆனால், மகன் தனது தாயின் தியாகங்களை புரிந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், சமூகத்தின் விமர்சனங்களை பொருட்படுத்தாமல், தனது தாயின் மகிழ்ச்சிக்காக துணை நிற்பது இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய பலமாக அமைகிறது. வழக்கமாக தாயின் தியாகத்தை மட்டுமே மையப்படுத்தும் கதைகளிலிருந்து மாறுபட்டு, ஒரு மகனின் ஆதரவை உணர்வுபூர்வமாக சித்தரிப்பதன் மூலம், திரையில் இதுவரை அரிதாகக் காணப்பட்ட தாய்–மகன் உறவின் புதிய பரிமாணத்தை இப்படம் வெளிப்படுத்துகிறது.
ஒரு தனித்தாய் பற்றிய கதையாக இருந்தாலும், திருமணம், தாய்மை, தியாகம், வாழ்க்கைத்துணையின் அவசியம் மற்றும் பெண்கள்மீது சமூகம் உருவாக்கியிருக்கும் எதிர்பார்ப்புகள் போன்ற பல முக்கியமான சமூகக் கருத்துகளையும் ‘நூறு சாமி’ ஆராய்கிறது. இதனால் பல தலைமுறைகளைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்கள் அனைவரும் எளிதில் தொடர்புபடுத்திக்கொள்ளக்கூடிய திரைப்படமாக இது உருவாகியுள்ளது.
திரையரங்குகளில் வெளியானபோது ஆரம்பத்தில் சுமாரான வரவேற்பைப் பெற்றிருந்தாலும், நேர்மறையான வாய்மொழி விமர்சனங்களின் மூலம் இரண்டாவது வாரத்தில் படத்தின் வரவேற்பு கணிசமாக உயர்ந்தது. மூன்றாவது வாரத்திலும் வெற்றிகரமாக ஓடிய இந்த திரைப்படம், அதன் உணர்வுப்பூர்வமான கதைக்களம் மற்றும் நடிகர்களின் சிறப்பான நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றது.
இதுகுறித்து ZEE5-ன் தென்னிந்திய மார்க்கெட்டிங் மூத்த துணைத் தலைவர் மற்றும் தமிழ் & மலையாள வணிகத் தலைவர் லாயிட் சி. சேவியர் கூறுகையில், “இன்றைய பார்வையாளர்கள் வெறும் பொழுதுபோக்கை மட்டுமல்லாமல், சமூக மாற்றங்களை பிரதிபலிக்கும், சிந்திக்க வைக்கும் கதைகளையும் விரும்புகிறார்கள். ‘நூறு சாமி’ அப்படிப்பட்ட திரைப்படம். ஆழமான பிராந்திய பின்னணியையும், முன்னோக்கிய சிந்தனையையும் இணைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், உணர்வுபூர்வமாக அனைவரையும் சென்றடையும். ‘பரிமளா & கோ’ திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு, வாழ்க்கையோடு ஒன்றிப்போகும் கதைகளுக்கான பார்வையாளர்களின் விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது. அந்தப் பயணத்தில் ‘நூறு சாமி’ மற்றொரு முக்கிய அத்தியாயமாக அமையும். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் பேசும் குடும்பங்களுக்கும் இந்தக் கதையை கொண்டு சேர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
‘பரிமளா & கோ’ வழங்கிய நகைச்சுவை அனுபவத்திற்குப் பிறகு, மனதை வருடும் குடும்பக் கதையுடன் ‘நூறு சாமி’இந்த ஆகஸ்ட் மாதம் ZEE5 தளத்தில் பார்வையாளர்களை சந்திக்க தயாராக உள்ளது. குடும்ப உறவுகள், தாய்மை மற்றும் சமூகத்தின் பார்வையை உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ள இந்த திரைப்படம், OTT பார்வையாளர்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.