ரொமான்டிக் ஃபேன்டஸி த்ரில்லராக உருவாகும் ‘சிட்டுக்குறிஞ்சி’… டப்பிங் பணிகள் தொடக்கம்; விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ்!

பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ரொமான்டிக் ஃபேன்டஸி த்ரில்லர் திரைப்படமான ‘சிட்டுக்குறிஞ்சி’ தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ள நிலையில், இறுதிக்கட்ட பின்னணிப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் வி.ஜே. மீனாட்சி சுந்தரம் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம், காதல், நகைச்சுவை மற்றும் ஃபேன்டஸி அம்சங்களை வித்தியாசமான திரைக்கதையுடன் இணைத்து, ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் திரையனுபவத்தை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ரஜித் மேனன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தீப்ஷிகா மற்றும் நக்ஷா சரண்நடித்துள்ளனர். மேலும் வி.ஜே. பப்பு, ஜி.எம். குமார், எல்.வி. ஆதவன், ராம்ஸ், ஹலோ கந்தசாமி, தேனி முருகன், சுஜாதா, கராத்தே ராஜா, ஈஸ்வர்பாபு, சத்யசீலன், வேளச்சேரி ஸ்ரீதர், மஞ்சு, ஜோன்ஸ், கிருஷ்ணகுமார், அட்வகேட் பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீராம் கார்த்திக் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதும் படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அதன் பிரம்மாண்டமான காட்சியமைப்பு குறிப்பிடப்படுகிறது. 1983-ஆம் ஆண்டை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்திற்காக, கொடைக்கானல் பள்ளங்கி மலைப்பகுதியில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய கிராம செட் அமைக்கப்பட்டு, அந்தக் காலகட்டத்தின் இயல்பான சூழல் தத்ரூபமாக மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் மற்றொரு முக்கிய பலமாக அதன் இசை உருவாக்கம் அமைந்துள்ளது. அறிமுக இசையமைப்பாளர் மாறாஇசையமைத்துள்ள இப்படத்தின் பின்னணி இசை, உலகப் புகழ்பெற்ற ஹங்கேரி நாட்டின் Budapest Scoring Company ஸ்டுடியோவில் சர்வதேச இசைக் கலைஞர்கள் பங்கேற்ற LIVE Orchestra மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகத் தரத்திலான இசை அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் முயற்சியை படக்குழு மேற்கொண்டுள்ளது.

பிரான்சிஸ் ராஜ்குமார் A. ஒளிப்பதிவை கவனித்துள்ள நிலையில், மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். டி. ஜூட் ஆனந்த் தயாரித்துள்ள இந்த திரைப்படம், வித்தியாசமான கதைக்களம், பிரம்மாண்டமான காட்சியமைப்பு மற்றும் காதல், நகைச்சுவை, ஃபேன்டஸி கலந்த பொழுதுபோக்கு அம்சங்களால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தற்போது டப்பிங் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

 

 

Comments (0)
Add Comment