இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘இடிமுழக்கம்’ திரைப்படத்தின் ‘கானா விளக்கு மயிலே…’ மற்றும் ‘அடி தேனி சந்தையில்…’ ஆகிய இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. இந்த இரண்டு பாடல்களையும் சோனி மியூசிக் வெளியிட்டுள்ளது.
இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் ஜிவி பிரகாஷ், முதல் முறையாக இயக்குநர் சீனு ராமசாமியுடன் இணைந்துள்ளதால், ‘இடிமுழக்கம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கலைமகன் முபாரக்தயாரித்துள்ள இந்த திரைப்படம் தென் மாவட்டங்களை பின்னணியாகக் கொண்ட பழிவாங்கும் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள ‘கானா விளக்கு மயிலே…’ பாடலின் வரிகளை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். நாட்டுப்புற இசை மணம் கமழும் இந்த பாடலை ஆண்டனி தாசன் பாடியிருக்க, என்.ஆர். ரகுநந்தன்இசையமைத்துள்ளார்.
அதேபோல், ‘அடி தேனி சந்தையில்…’ பாடலை லா. வரதன் எழுதியுள்ளார். இந்த பாடலை ஆண்டனி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா இணைந்து பாடியுள்ளனர். இரண்டு பாடல்களும் கிராமிய இசை, துள்ளலான ரிதம் மற்றும் கொண்டாட்ட மனநிலையுடன் உருவாகியிருப்பதால், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘இடிமுழக்கம்’ திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் இறைச்சிக் கடை உரிமையாளராக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், அருள்தாஸ், சௌந்தரராஜா, யோகி பாபு, பாபா பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை சீனு ராமசாமி மேற்கொண்டுள்ளார். வசனங்களை பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் சீனு ராமசாமி இணைந்து எழுதியுள்ளனர். அசோக் ராஜ் (ஒளிப்பதிவாளர் சுகுமாரின் உதவியாளர்) ஒளிப்பதிவை கவனித்துள்ள நிலையில், சங்கத்தமிழன் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். தினேஷ் மாஸ்டர் மற்றும் பாபா பாஸ்கர் ஆகியோர் நடன அமைப்பை வடிவமைத்துள்ளனர்.
இரண்டு துள்ளலான குத்துப்பாடல்களின் வெளியீட்டால் ‘இடிமுழக்கம்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.