நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது “மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை” சார்பில், நம்மாழ்வாரின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது மற்றும் தலா ₹5,000 ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் இயற்கை விவசாயத்தில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, இந்த ஆண்டு தஞ்சாவூரில் நடைபெற்றது.
விருது வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சௌந்தரராஜா, இயற்கை விவசாயிகளை கௌரவிப்பது தனது வாழ்க்கையின் மிகவும் அர்த்தமுள்ள தருணங்களில் ஒன்றாக இருப்பதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு விவசாயிகளிடம் கிடைத்த வரவேற்பும் மகிழ்ச்சியும், இந்த ஆண்டும் இந்நிகழ்வை நடத்துவதற்கு ஊக்கமாக அமைந்ததாக அவர் கூறினார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் இரா. விஜய் சரவணன், இயற்கை விவசாயம் குறித்து உரையாற்றிய வேளாண் செம்மல் கோ. சித்தர், மற்றும் நம்மாழ்வாரின் அண்ணன் மகன் பூமிநாதன் ஆகியோருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
இன்றைய இளைஞர்கள் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் என்றும், உணவை உருவாக்கும் விவசாயிகளை மதிக்கும் மனப்பான்மை சமூகத்தில் வளர வேண்டும் என்றும் சௌந்தரராஜா வலியுறுத்தினார். இயற்கை விவசாயம் என்பது ஒரு விவசாய முறையைத் தாண்டி, மண்ணையும் மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும் வாழ்க்கை முறையாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், “அடுத்த ஜென்மம் இருந்தால் விவசாயக் குடும்பத்தில் பிறக்க விரும்புகிறேன்” என்று கூறியிருப்பதை நினைவுகூர்ந்த சௌந்தரராஜா, விவசாயிகளின் நலனுக்காக அவர் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக தெரிவித்தார்.
விவசாயிகளை பாதுகாப்பதும், இயற்கை விவசாயத்தை மீட்டெடுப்பதும் அனைவரின் கடமை என்றும், அதிகளவில் மரங்கள் நடுதல், நீர்நிலைகளை பாதுகாத்தல் மற்றும் சுற்றுச்சூழலை காக்கும் பணிகளில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
மேலும், தனது “மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை” மூலம் எதிர்காலத்திலும் விவசாயிகள், மாணவர்கள் மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாகவும் சௌந்தரராஜா தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.