மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ‘ஜமா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன் கதை, திரைக்கதை எழுதி, கதாநாயகனாக நடித்தும் இயக்கியும் உருவாக்கியுள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம், கடந்த ஜூலை 17, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்களிடமிருந்து தொடர்ந்து கிடைத்து வரும் வரவேற்பை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் வெற்றி விழாவை நடத்தினர்.
இந்த நிகழ்வில் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் கலந்து கொண்டு, திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமான ரசிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட், இது தனது முதல் வெற்றி விழா என்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார். திரைப்படம் வெற்றிகரமாக ஓடுவதோடு, திரையரங்குகளில் காட்சிகளும் அதிகரித்து வருவதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த வெற்றி ஒட்டுமொத்த படக்குழுவின் கூட்டு முயற்சியின் பலன் என்றும் குறிப்பிட்டார்.
படத்தொகுப்பாளர் பார்த்தா, ஒரு நல்ல திரைக்கதையை முழுமையான திரைப்படமாக மாற்றுவதில் ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரின் பங்களிப்பும் முக்கியமானது என்றார். எந்தவித சர்ச்சைகளும் இல்லாமல், படத்தின் உண்மையான உணர்வுகளை ரசிகர்களிடம் கொண்டு சென்றதே வெற்றிக்கான முக்கிய காரணம் என்றும், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸின் புரமோஷன் குழுவுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் பரத் சங்கர், இந்த வெற்றி விழா சம்பிரதாய நிகழ்வாக இல்லாமல், மனப்பூர்வமான நன்றி தெரிவிக்கும் மேடையாக அமைந்துள்ளது என்றார். இயக்குநர் பாரி இளவழகன் சமூகத்திற்கு தேவையான கருத்தை எளிமையாகவும் நகைச்சுவையுடனும் சொல்லியிருப்பதாக பாராட்டிய அவர், ரம்யா ரங்கநாதனின் கதாபாத்திரம் படத்தின் முக்கிய பலமாக அமைந்ததாகக் குறிப்பிட்டார். இசை மற்றும் பின்னணி இசைக்கு கிடைத்த பாராட்டுகள் ஒரு இசையமைப்பாளராக மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாகவும் தெரிவித்தார்.
உடை வடிவமைப்பாளர் அபி நந்தினி, தயாரிப்பாளர் யுவராஜ் மற்றும் இயக்குநர் பாரி இளவழகனுக்கு நன்றி தெரிவித்து, குறிப்பாக ரம்யா ரங்கநாதனுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் இனிமையான அனுபவமாக இருந்ததாகக் கூறினார்.
நடிகை ரம்யா ரங்கநாதன், ‘மேஜிக்’ கதாபாத்திரத்தை ரசிகர்கள் மனதார ஏற்றுக்கொண்டது தனது வாழ்க்கையின் மிகப்பெரிய அங்கீகாரம் என்று நெகிழ்ச்சியுடன் பேசினார். திரையரங்குகளில் ரசிகர்களுடன் படம் பார்த்த அனுபவம் மறக்க முடியாதது என்றும், சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தன்னை ‘மேஜிக்’ என்று அழைத்தது மகிழ்ச்சியளித்ததாக கூறினார். திரைப்படத்தின் முதல் வார வெற்றிக்கு பத்திரிகை மற்றும் ஊடகங்களின் நேர்மறை விமர்சனங்களே முக்கிய காரணம் என்றும், BookMyShow-வில் காட்சிகள் நிரம்புவதை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்ததாகவும் சுவாரஸ்யமாக பகிர்ந்துகொண்டார்.
நடிகர் சுதர்சன், இதுவரை பல திரைப்பட விழாக்களை தொகுத்து வழங்கியிருந்தாலும், இன்று நடிகராக வெற்றி விழா மேடையில் நிற்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். இயக்குநர் பாரி இளவழகன், தயாரிப்பாளர் யுவராஜ் மற்றும் முழு படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்து, இனி வரும் காலங்களிலும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்ற உறுதியை வெளிப்படுத்தினார்.
ஈரா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பேசிய கலா, பெரிய படங்களின் போட்டிக்கு மத்தியில் வெளியான சிறிய திரைப்படம் ரசிகர்களின் ஆதரவால் வெற்றி பெற்றிருப்பது பெருமைக்குரியது என்றார். ஆரம்பத்திலிருந்தே இந்தக் கதையின் மீது தனக்கு நம்பிக்கை இருந்ததாகவும், அந்த நம்பிக்கை இன்று நனவாகியிருப்பதாகவும் தெரிவித்தார். படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.
தயாரிப்பாளர் யுவராஜ், திரைப்படத்தின் வெற்றி என்பது நடிகர்கள் அல்லது இயக்குநரின் வெற்றி மட்டுமல்ல; திரைக்குப் பின்னால் உழைத்த நூற்றுக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் என்றும் கூறினார். இயக்குநர் பாரி இளவழகன் மீது ஆரம்பத்திலிருந்தே தனக்கு முழு நம்பிக்கை இருந்ததாகவும், அந்த நம்பிக்கையே இன்று வெற்றியாக மாறியிருப்பதாகவும் தெரிவித்தார். ரசிகர்களின் அன்பு தங்களுக்கு இன்னும் நல்ல திரைப்படங்களை உருவாக்கும் தன்னம்பிக்கையை வழங்கியுள்ளதாகக் கூறினார்.
இயக்குநர் பாரி இளவழகன், நன்றியுணர்வே மனிதனின் மிகப்பெரிய செல்வம் என்று கூறி தனது உரையைத் தொடங்கினார். அன்பே டயானா திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சென்ற பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு முதலில் நன்றி தெரிவித்த அவர், நடிகர் விஜய் சேதுபதி தனது மீது வைத்த நம்பிக்கைக்கும், தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷுடன் இணையும் வாய்ப்பை ஏற்படுத்திய ஊக்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.
தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷ், தனது எழுத்து மற்றும் காட்சிகளில் எந்தவித தலையீடும் இல்லாமல் முழு சுதந்திரம் வழங்கியதாகக் குறிப்பிட்ட அவர், ரோஜா, ரம்யா ரங்கநாதன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட நடிகர்களின் அர்ப்பணிப்பையும் பாராட்டினார். ‘மேஜிக்’ என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடம் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை தனக்கு ஆரம்பத்திலிருந்தே இருந்ததாகவும், இன்று அது நனவாகியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் இயக்குநர் குழு, தயாரிப்புக் குழு, புரமோஷன் குழு மற்றும் பி.ஆர்.ஓ. யுவராஜ் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.
ஈரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனர் சரவணன், யுவராஜ் கணேஷ் மற்றும் சத்யா காரிகாலன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியது பெருமை என்றும், பெரிய படங்களின் வெளியீட்டுக்கு மத்தியில் ‘அன்பே டயானா’ வெற்றி பெற்றிருப்பது தரமான உள்ளடக்கத்திற்குக் கிடைத்த வெற்றி என்றும் கூறினார். தயாரிப்பாளர் யுவராஜின் எளிமை, நேர்மை மற்றும் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதார பாராட்டிய அவர், பாரி இளவழகன் போன்ற திறமையான இயக்குநர்களுடன் தமிழ்ச் சினிமா தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அன்பே டயானா’, வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்ட கிராஸ்-கல்ச்சுரல் காதல் கதையாக உருவாகியுள்ளது. பாரி இளவழகனுடன் ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘மண்டேலா’, ‘மாவீரன்’ படங்களின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, ‘அருவி’ புகழ் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை மகேந்திரன் கவனித்துள்ளார். மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் தொடர்ச்சியான ஆதரவால் திரையரங்குகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ‘அன்பே டயானா’ திரைப்படம் வெற்றிகரமாக தனது திரையரங்கு பயணத்தை தொடர்ந்து வருகிறது.