பன்முகத் திறமை கொண்ட நடிகர் துல்கர் சல்மான், அறிமுக இயக்குநர் ரவி நெலகுதிடி இயக்கத்தில் உருவாகி வரும் தனது 41வது திரைப்படமான **‘ஸ்ரீ ஸ்ரீ’**யின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். எஸ்.எல்.வி. சினிமாஸ்நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி தயாரிக்கும் இந்த திரைப்படம், அந்நிறுவனத்தின் 10வது பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாகி வருகிறது. இஷான் சக்சேனா இணை தயாரிப்பாளராக பணியாற்றும் இப்படத்தில், முதல் முறையாக துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடித்துள்ளனர்.
காதல், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் உணர்வுகளுடன் உருவாகி வரும் இந்த காதல் திரைப்படத்தின் முதல் பாடலான ‘வானே வானே’ (Vaane Vaane) தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான படப்பிடிப்பு தளக் காட்சிகள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
ரயில் நிலையத்தில் அமர்ந்திருக்கும் துல்கர் சல்மானின் கதாபாத்திரம், நடைமேடையில் நுழைந்து வரும் பூஜா ஹெக்டேவை பார்த்து மெய்மறக்கும் தருணத்துடன் பாடல் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து இருவரும் பகிர்ந்து கொள்ளும் இனிய தருணங்கள், பயணக் காட்சிகள் மற்றும் காதல் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் மாண்டேஜ் காட்சிகள் பாடலுக்கு கூடுதல் அழகை சேர்க்கின்றன.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், மீண்டும் ஒரு முறை மனதை வருடும் மெல்லிசையை வழங்கியுள்ளார். முதல் முறை கேட்கும்போதே மனதில் பதியும் மெட்டு, நேர்த்தியான இசைக்கருவிகளின் பயன்பாடு மற்றும் இனிமையான இசை அமைப்பு ஆகியவை பாடலை சிறப்பாக்குகின்றன.
பாடலாசிரியர் கே.ஆர். தரன், ஆழமான காதலில் இருக்கும் இளைஞனின் மனநிலையையும், கதாநாயகியின் அழகு, நளினம் மற்றும் வசீகரத்தை கவித்துவமான வரிகளில் பதிவு செய்துள்ளார். பின்னணி பாடகர் நகுல் அபயங்கர், தனது உணர்வுபூர்வமான குரலால் பாடலுக்கு உயிரூட்டியிருக்கிறார். ராம் மாஸ்டர் அமைத்துள்ள நடனமும் பாடலின் காட்சியமைப்பை மேலும் மெருகேற்றியுள்ளது.
இந்தப் பாடலின் மிகப்பெரிய பலமாக துல்கர் சல்மான் மற்றும் பூஜா ஹெக்டே இடையேயான இயல்பான கெமிஸ்ட்ரி அமைந்துள்ளது. இருவரின் திரை இருப்பு, இயல்பான காதல் வெளிப்பாடு மற்றும் கண்கவர் லொகேஷன்களில் படமாக்கப்பட்ட காட்சிகள் பாடலை மேலும் ரசிக்க வைக்கின்றன. மனதை கவரும் இசை, அழகிய ஒளிப்பதிவு மற்றும் காதல் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தும் காட்சிகள் ஆகியவற்றால், ‘வானே வானே’ இந்த ஆண்டின் அடுத்த வைரல் காதல் பாடலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் அனய் ஓம் கோஸ்வாமி ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ள நிலையில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தயாரிப்பு வடிவமைப்பை அவினாஷ் கொல்லா கவனித்துள்ளார். வலுவான தொழில்நுட்பக் குழுவுடன் உருவாகி வரும் இந்த திரைப்படம், பார்வையாளர்களுக்கு கண்கவர் மற்றும் உணர்வுபூர்வமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் ‘ஸ்ரீ ஸ்ரீ’, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.