மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ‘மொத ராத்திரி’ ஆகஸ்ட் 21-ல் ரிலீஸ்… ஒரு திருமணம், ஒரு இரவு, முடிவில்லா சிரிப்பு!

இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள முழுநீள குடும்ப நகைச்சுவை திரைப்படமான ‘மொத ராத்திரி’, வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. ஒரு திருமண இரவை மையமாகக் கொண்டு நகைச்சுவை, குழப்பம், உணர்வுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள ‘மொத ராத்திரி’, ஒரு சாதாரண கிராமத்து திருமணத்தில் நடைபெறும் அசாதாரண சம்பவங்களை சிரிப்பூட்டும் வகையில் சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ளது. முழுக் கதையும் ஒரே இரவில் நடைபெறுவதால், ஒவ்வொரு காட்சியும் புதுமையான திருப்பங்களுடனும், வேடிக்கையான தவறான புரிதல்களுடனும், குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய நகைச்சுவை தருணங்களுடனும் நகர்கிறது.

இந்தப் படத்தின் மூலம் ரிஷிகாந்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக, ‘சிறை’, ‘யூத்’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது நடிப்பால் கவனம் பெற்ற அனிஷ்மா அனில்குமார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் குறித்து தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி கூறுகையில், “இந்தக் கதையை முதன்முதலில் கேட்டபோதே நாங்கள் மனம் விட்டு சிரித்தோம். அதே அனுபவத்தை ரசிகர்களும் திரையரங்குகளில் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்தோம். நகைச்சுவை, உணர்வு, குடும்ப உறவுகள் மற்றும் முழுமையான பொழுதுபோக்கு ஆகிய அனைத்தும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. ஆகஸ்ட் 21 முதல் ரசிகர்கள் படம் முழுவதும் சிரித்து மகிழ்வார்கள் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்றார்.

இயக்குநர் ராஜா கருப்பசாமி கூறுகையில், “ஒரு இயக்குநராக எனது பயணத்தை தொடங்குவதற்கு இதைவிட சிறந்த வாய்ப்பு கிடைக்க முடியாது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற முன்னணி நிறுவனத்தின் நம்பிக்கையும் ஆதரவும் இந்தக் கதையை நான் நினைத்தபடி திரையில் சொல்ல உதவியது. படத்தை பார்த்து வெளியேறும் ரசிகர்கள் கதாபாத்திரங்களை நினைத்து தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்,” என்றார்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவில் சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவாளராகவும், பரத் சங்கர்இசையமைப்பாளராகவும், அசோக் அர்ஜுனன் படத்தொகுப்பாளராகவும், பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பாளராகவும், ஏ. பாலுமகேந்திரா கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர். விளம்பர வடிவமைப்பை வியாகி மேற்கொண்டுள்ளார்.

ஒரு திருமணம்… ஒரு இரவு… எண்ணிலடங்கா குழப்பங்கள்… இடைவிடாத நகைச்சுவை… குடும்பத்துடன் மனம் விட்டு சிரிக்க வைக்கும் முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’, வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Comments (0)
Add Comment