இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படங்களில் ஒன்றான ‘ராமாயணம்: பகுதி 1’திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இந்த திரைப்படம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ரசிகர்களிடம் அறிமுகமாகியுள்ளது.
பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ், எட்டு முறை அகாடமி விருது பெற்ற DNEG மற்றும் யஷின் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை உலகளவில் சோனி பிக்சர்ஸ் வெளியிடுகிறது. வட இந்தியாவில் தர்மா புரொடக்ஷன்ஸ் விநியோகத்தை மேற்கொள்கிறது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த காவியத்தின் முதல் பாகம், 2026 தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தியாவின் காலத்தால் அழியாத மகாகாவியமான ராமாயணத்தை, உலகத் தரமான தொழில்நுட்பத்துடனும், பிரம்மாண்டமான காட்சியமைப்புடனும் திரையில் உயிர்ப்பிக்கும் முயற்சியாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. தர்மத்தை நிலைநிறுத்த மனித அவதாரமாக பூமியில் பிறக்கும் இராமர், அவருக்கு எதிராக அளவற்ற சக்தியுடன் நிற்கும் இராவணன், இருவருக்கும் இடையே நடைபெறும் மாபெரும் மோதலை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.
இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் பகவான் ஸ்ரீ ராமராகவும், சாய் பல்லவி சீதா தேவியாகவும், யஷ் இராவணனாகவும் நடித்துள்ளனர். மேலும் ரவி துபே லட்சுமணனாகவும், அருண் கோவில் மன்னர் தசரதராகவும், ஷோபனாகைகேயியாகவும், அஜிங்க்யா தேவ் மகரிஷி விஸ்வாமித்திரராகவும், குனால் கபூர் தேவேந்திரனாகவும், ரகுல் ப்ரீத் சிங்சூர்ப்பணகையாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேசிய விருது பெற்ற எழுத்தாளர் ஸ்ரீதர் ராகவன் திரைக்கதை எழுதியுள்ள இந்த திரைப்படத்திற்கு, ஆஸ்கர் விருது பெற்ற இசை மேதைகள் ஹான்ஸ் சிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்திய மற்றும் சர்வதேச தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றியுள்ள இந்தப் படம், உலகத் தரமான விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் திரை அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பாளரும் படைப்பாற்றல் வடிவமைப்பாளருமான நமித் மல்ஹோத்ரா, “ராமாயணம் என்பது ஒரு இதிகாசம் மட்டுமல்ல; இந்தியர்களின் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித மதிப்புகளையும் பண்பாட்டையும் தலைமுறைகளுக்கு எடுத்துச் செல்லும் இந்த காவியத்தை, உலகத் தரத்தில் உலக ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்களின் நோக்கம். இந்தியாவின் பண்பாட்டு செழுமையை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் புதிய பயணத்தின் தொடக்கமாக இந்த திரைப்படம் அமையும்,” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் நிதேஷ் திவாரி கூறுகையில், “ராமாயணத்தின் உண்மையான வலிமை அதன் பிரம்மாண்டத்தில் இல்லை; அது எடுத்துரைக்கும் மனிதநேய மதிப்புகளில்தான் இருக்கிறது. அந்த உணர்வுகளை முழுமையான மரியாதையுடனும், உண்மைத்தன்மையுடனும், உலகத் தரமான தொழில்நுட்பத்துடனும் திரையில் கொண்டு வருவதே எங்களின் முக்கிய இலக்காக இருந்தது. இந்தக் கனவை உலகின் சிறந்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடன் இணைந்து நனவாக்கியதில் பெருமை கொள்கிறேன்,” என்றார்.
உலகப் புகழ்பெற்ற DNEG நிறுவனத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் திறனும், பிரைம் ஃபோகஸ் ஸ்டுடியோஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்களின் பிரம்மாண்ட தயாரிப்பும் இணைந்துள்ள ‘ராமாயணம்: பகுதி 1’, இந்திய சினிமாவின் மிகப்பெரிய திரை அனுபவங்களில் ஒன்றாக உருவாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இந்த திரைப்படம், 2026 தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.