காதலும் த்ரில்லும் கலந்த ரொமான்டிக் திரில்லராக உருவாகும் ‘சிக்னல் அட் 11.30’…

அலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படம், காதல், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ரொமான்டிக் திரில்லராக உருவாகி வருகிறது. படத்தின் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

படத்தின் தலைப்பே ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் உண்மையான அர்த்தத்தை படக்குழு இதுவரை வெளியிடவில்லை. அந்த சஸ்பென்ஸை திரையரங்க அனுபவத்திற்காகவே பாதுகாத்து வைத்திருப்பதாக இயக்குநர் மலர்விழி நடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “‘சிக்னல் அட் 11.30’ என்ற தலைப்பு கதையின் மையக் கருவோடு நேரடியாக தொடர்புடையது. அதன் அர்த்தத்தை இப்போது வெளிப்படுத்தினால், படத்தின் மிகப்பெரிய ஆச்சரியங்களில் ஒன்று முன்கூட்டியே தெரிந்துவிடும். இந்தக் கதையில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்த நோக்கம் உள்ளது. காதல், சஸ்பென்ஸ், உணர்வுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ரொமான்டிக் திரில்லராக இந்தப் படம் உருவாகியுள்ளது” என்றார்.

நடிகர்கள் தேர்வு குறித்து பேசிய அவர், “திரைக்கதை எழுதும்போதே கதாநாயகன், கதாநாயகிக்குத் தேவையான உணர்வுப்பூர்வமான ஆழமும், திரை ஆளுமையும் குறித்து தெளிவான பார்வை இருந்தது. அந்த இரண்டையும் இயல்பாக வெளிப்படுத்தக்கூடிய நடிகர்களில் சந்தோஷ் பிரதாப் ஒருவர். அவரது அர்ப்பணிப்பும், நேர்மையான உழைப்பும் கதாபாத்திரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. பவ்யா திரிகா மற்றும் பூஜிதா பொன்னாடாவும் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் ஒவ்வொரு திருப்பமும் ரசிகர்களை கவரும் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்.

ஆர்வத்தைத் தூண்டும் கதைக்களம், உணர்வுப்பூர்வமான திரைக்கதை மற்றும் இறுதிவரை யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் திருப்பங்களுடன், ‘சிக்னல் அட் 11.30’ ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் படமாக உருவாகி வருகிறது.

அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்ரமணி தயாரிக்கும் இப்படத்தில், சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர். கலைவாணன் படத்தொகுப்பை கவனித்துள்ள நிலையில், ஷெரீஃப் நடன அமைப்பை மேற்கொண்டுள்ளார்.

Comments (0)
Add Comment