உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட ‘நிறம்’… டி. இமான் இசையில் மிரட்டும் டிரெய்லர் வெளியீடு!

K Square Cinemas தயாரிப்பில், இயக்குநர் பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் ஊடகத்தினர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. டி. இமான் இசையமைத்துள்ள இப்படம் “Inspired from True Incidents”என்ற அடைமொழியுடன் உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட கிரைம்–இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது. வெளியிடப்பட்ட டிரெய்லர், பரபரப்பும் மர்மமும் நிறைந்த காட்சிகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விழாவில் பேசிய பாடகி ஸ்ரீநிஷா, “நூதனா” பாடலை பாடிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானதாக இருந்ததாகவும், டி. இமான் இசையில் மீண்டும் பணியாற்றியதில் பெருமை அடைவதாகவும் கூறினார். இயக்குநர் பலராம் கிருஷ்ணா குடும்ப உறுப்பினரைப் போல அனைவரையும் கவனித்துக் கொண்டதாகவும் அவர் நன்றி தெரிவித்தார்.

நடன அமைப்பாளர் சாய் பாரதி, “நூதனா” பாடலுக்கான நடன அமைப்பில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்றும், கொடைக்கானலில் நடைபெற்ற படப்பிடிப்பும், ஒளிப்பதிவாளர் உருவாக்கிய காட்சிகளும் பாடலுக்கு கூடுதல் அழகை சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

நடிகை தான்யா ஹோப், இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி தெரிவித்ததுடன், இயக்குநர் பலராம் கிருஷ்ணா மற்றும் நிதின் சத்யாவுக்கு நன்றி தெரிவித்தார். சங்கர் மாஸ்டரின் நடன அமைப்பும், முழு படக்குழுவின் அர்ப்பணிப்பும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

தமிழில் தனது முதல் திரைப்படப் பாடலை பாடியுள்ள பாடகி பிரவஸ்தி, இந்த வாய்ப்பை வழங்கிய இசையமைப்பாளர் டி. இமான் மற்றும் இயக்குநர் பலராம் கிருஷ்ணாவுக்கு நன்றி தெரிவித்தார். தமிழ் திரைப்படத்தில் பாட வேண்டும் என்ற தனது நீண்டநாள் கனவு இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியதாக அவர் கூறினார்.

நடிகை ப்ரீந்து மாதவி, “நிறம்” படக்குழுவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்ததுடன், அனைவரும் திரையரங்குகளில் படம் பார்த்து ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

நடிகர் நிதின் சத்யா, “நிறம்” தனக்கு மிகவும் நெருக்கமான படம் என்றும், இயக்குநர் பலராம் கிருஷ்ணாவுடன் நீண்டநாள் நட்பு காரணமாக நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றியதாக தெரிவித்தார். டி. இமான் மற்றும் முழு தொழில்நுட்பக் குழுவின் அர்ப்பணிப்பை பாராட்டிய அவர், படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இசையமைப்பாளர் டி. இமான், கதையை கேட்டவுடனேயே இப்படத்தின் தனித்துவம் தன்னை கவர்ந்ததாகவும், முதல் படத்திலேயே அனுபவமிக்க இயக்குநரைப் போல பலராம் கிருஷ்ணா பணியாற்றியிருப்பதாகவும் பாராட்டினார். நடிகர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் பங்களிப்பே படத்தின் முக்கிய பலம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இயக்குநர் பலராம் கிருஷ்ணா, இயக்குநராக தனது கனவு நனவாகியுள்ள தருணம் இது எனக் கூறினார். “நிறம்” என்பது ஒரு தலைப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு மனிதனின் மனநிலையும், குணமும், சூழ்நிலையும் மாறிக்கொண்டே இருப்பதை பிரதிபலிக்கும் கருத்துதான் இந்தப் படத்தின் மையமாக இருப்பதாக அவர் விளக்கினார். ஒவ்வொரு கதாபாத்திரமும், காட்சியும் கதைக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், நல்ல உள்ளடக்கத்தை ரசிகர்கள் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

நாயகன் முகன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மீண்டும் நடிப்பதில் மகிழ்ச்சி தெரிவித்தார். பலராம் கிருஷ்ணாவின் தெளிவான இயக்கமும், நடிகர்களுக்கு வழங்கிய சுதந்திரமும் தனது நடிப்பை மேலும் சிறப்பாக்கியதாக கூறிய அவர், டி. இமான் இசையில் நடித்தது தனது கனவு நிறைவேறிய தருணம் என்றும் தெரிவித்தார்.

‘நிறம்’ திரைப்படத்தில் முகன், தான்யா ஹோப், ப்ரீந்து மாதவி, நிதின் சத்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். தினேஷ் சுப்பராயன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், கலை இயக்கத்தை தாமோதரன் மேற்கொண்டுள்ளார். கே. பிந்து மாதவி தயாரித்துள்ள இப்படத்தின் இணைத் தயாரிப்பாளராக பி. ராஜேஷ் பணியாற்றியுள்ளார்.

உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட கிரைம் த்ரில்லராக உருவாகியுள்ள ‘நிறம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment