காதலின் புதிய மொழி பேசும் ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’… மனதை வருடும் டீசர்!

டி. ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் வாழ்க்கையின் மாற்றங்களை மையமாகக் கொண்ட மனதை வருடும் படைப்பாக உருவாகியுள்ளது.

ஒளியும் ஒலியும் இணைந்து சொல்லப்படும் எபிக் காதல் கதையாக உருவாகியுள்ள இந்த திரைப்படம், பழைய காதல் கதைகளின் அழகிய உணர்வுகளை தக்கவைத்துக் கொண்டே, இன்றைய ஜென்-ஜி மற்றும் மில்லேனியல் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற நவீன திரைக்கதையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. காதலின் ஆழத்தையும் மனித மனத்தின் போராட்டங்களையும் உணர்வுபூர்வமாகச் சொல்லும் முயற்சியாக இந்தப் படம் அமைகிறது.

சிறுவயதிலேயே தாயை இழந்து தனிமையில் வளர்ந்த ஒரு இளைஞன், மதுப்பழக்கத்தின் பிடியில் சிக்கி இருள் சூழ்ந்த வாழ்க்கையை வாழும் நிலையில், அவரது வாழ்க்கைக்குள் நுழையும் காதல் அனைத்தையும் மாற்றி அமைக்கிறது. தனிமை, வலி மற்றும் விரக்தியில் இருந்து நம்பிக்கை மற்றும் புதிய வாழ்க்கையை நோக்கி அழைத்துச் செல்லும் அந்தப் பயணமே திரைப்படத்தின் மையக் கதையாக அமைந்துள்ளது.

வெளியாகியுள்ள டீசர், கதாநாயகனின் மனநிலையையும், காதல் ஏற்படுத்தும் மாற்றத்தையும் உணர்வுப்பூர்வமான காட்சிகளின் மூலம் வெளிப்படுத்துகிறது. காதலின் மென்மையும் வாழ்க்கையின் வலியும் சமநிலையுடன் சொல்லப்பட்டிருக்கும் இந்த டீசர், சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று, திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாக, முழுப் படமும் லைவ் சவுண்ட் (Live Sound) தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து பாடல்களும் நேரடி இசைக்கருவிகளைக் கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளதால், இயல்பான ஒலியமைப்புடன் வித்தியாசமான திரையரங்கு அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Anthony’s Atelier நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் டி. ஆண்டனி, மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் படத்தொகுப்பை டி. ஆண்டனி கவனித்துள்ளார். பியட்ரோ வில்லானி ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், பாடல்களுக்கு ஜெய்கார் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன்இசையமைத்துள்ளனர். பின்னணி இசையை ஜோயி ரிடா அமைத்துள்ளார். பாடல் வரிகளை கார்த்திக் நேத்தா மற்றும் தமிழ்மணி எழுதியுள்ளனர். ஒலிப்பதிவு பணிகளை ஜெய்கார் ஹரிநாத், சவுண்ட் மிக்சிங்கை ஆனந்த் ராமச்சந்திரன், கலை இயக்கத்தை கே.கே. சுரேந்தரன் மேற்கொண்டுள்ளனர். நிர்வாகத் தயாரிப்பாளர்களாக ஹரிஹரன் மற்றும் சந்தோஷ் பணியாற்றியுள்ளனர்.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி திரைப்படத்தை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

உணர்வுகளும் இசையும் இணைந்த காதல் அனுபவத்தை வழங்கவுள்ள ‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’, அதன் உணர்வுபூர்வமான டீசர் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

Comments (0)
Add Comment