இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் ஹாரர்–த்ரில்லர் திரைப்படமான ‘டிமான்டி காலனி 3’ படத்தின் முதல் பாடலான ‘ரத்தத்த தா’ வெளியாகி, இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இசையமைப்பாளர் சாம் சி எஸ் இசையமைத்து, அவரே பாடியுள்ள இந்தப் பாடல், வெளியான குறுகிய நேரத்திலேயே சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
மோகன் ராஜன் எழுதிய பாடல் வரிகளுக்கு சாம் சி எஸ் தனது தனித்துவமான இசை பாணியை வழங்கியுள்ளார். பாடலின் ஒவ்வொரு வரியிலும் கதையின் இருண்ட மனநிலையை உணர்த்தும் வகையில் அவரது குரலும், இசையும் ஒன்றோடொன்று கலந்துள்ளன. பாடல் முழுவதும் ஹாரர் மற்றும் டார்க் தீம் கலந்த இசை அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குகிறது.
ஏற்கனவே ‘டிமான்டி காலனி 2’ திரைப்படத்தில் தனது பின்னணி இசையால் ரசிகர்களை மிரள வைத்திருந்த சாம் சி எஸ், தற்போது ‘டிமான்டி காலனி 3’ படத்திலும் தனது இசை மாயாஜாலத்தை தொடர்ந்துள்ளார். குறிப்பாக இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள இசைக் கோர்வை மற்றும் சவுண்ட் டிசைன், படத்தின் மர்ம உலகத்திற்குள் ரசிகர்களை இழுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் ஹாரர்–த்ரில்லர் ஜானரில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள ‘டிமான்டி காலனி’ திரைப்படத் தொடர், ரசிகர்களிடையே ஏற்கனவே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அஜய் ஞானமுத்து – அருள்நிதி – சாம் சி எஸ் கூட்டணியில் உருவாகி வரும் ‘டிமான்டி காலனி 3’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘ரத்தத்த தா’ பாடல் அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.
பல்வேறு ஜானர்களில் தனது தனித்துவமான இசை அடையாளத்தை தொடர்ந்து பதித்து வரும் சாம் சி எஸ், இந்தப் பாடல் மூலமாக மீண்டும் ஒருமுறை ரசிகர்களை தனது இசையால் கவர்ந்துள்ளார். வெளியான குறுகிய நேரத்திலேயே இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி, இசை ரசிகர்களிடமிருந்து பாராட்டுகளை பெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக இயங்கி வரும் சாம் சி எஸ், தமிழில் தற்போது ‘கராத்தே பாபு’, ‘சர்தார் 2’, புஷ்கர்–காயத்ரி இயக்கும் புதிய திரைப்படம், ஹெச். வினோத் – தனுஷ்கூட்டணி படம் உள்ளிட்ட பல முக்கியமான படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
‘ரத்தத்த தா’ பாடல் வெளியீட்டின் மூலம் ‘டிமான்டி காலனி 3’ திரைப்படத்தின் இசைப் பயணம் விறுவிறுப்பாக தொடங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.