முன்னணி இளம் நடிகர் அசோக் செல்வன் நடிப்பில், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஆசை வரமே’ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அழகான காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தாஇசையமைத்துள்ளார். சின்மயி மற்றும் கோவிந்த் வசந்தா இணைந்து பாடியுள்ள ‘ஆசை வரமே’ பாடலுக்கு பாடலாசிரியர் மெட்ராஷீ வரிகளை எழுதியுள்ளார்.
“நேர நதி தீரும் வரை, நீல அலை ஓயும் வரை” என தொடங்கும் இப்பாடல், காதலின் ஆழமான உணர்வுகளை மென்மையான இசையுடன் பதிவு செய்கிறது. இளம் காதலர்களின் அன்பு, நெருக்கம், ஊடல் மற்றும் செல்லச் சண்டைகள் என காதலின் பல்வேறு உணர்வுகளையும் பாடல் அழகாக வெளிப்படுத்துகிறது.
கோவிந்த் வசந்தாவின் மெலோடியான இசையும், சின்மயி மற்றும் கோவிந்த் வசந்தாவின் குரல்களும் பாடலுக்கு கூடுதல் அழகு சேர்த்துள்ளன. காதலின் இனிமையான தருணங்களை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ள இந்த மெலடி, வெளியானது முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ படப்புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கௌதம் ராஜேந்திரன்ஒளிப்பதிவை மேற்கொள்ள, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை ஆர்.கே. செல்வாகவனிக்கிறார். மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.
ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
காதல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தை வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ‘ஆசை வரமே’ பாடலுக்கு கிடைத்து வரும் வரவேற்பு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
காதல், இசை மற்றும் இளமை உணர்வுகளை மையமாகக் கொண்ட ‘அன்பில் அவன்’, ரசிகர்களுக்கு அழகான காதல் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.