“வடசென்னையை இதுவரை பார்க்காத கோணத்தில் காட்டியிருக்கிறார்” – ‘ஆல் பாஸ்’ விழாவில் திரைப்பிரபலங்கள் பாராட்டு!

வடசென்னையின் எதார்த்தமான வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், விக்ரமன், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் (One Step Entertainment) சார்பில் மோகனா. ஆர் தயாரித்துள்ள இப்படத்தை மைதீன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். ‘நிறங்கள் மூன்று’, ‘தருணம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த துஷ்யந்த் கதாநாயகனாகவும், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜனனி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

விழாவில் பேசிய இயக்குநர் மைதீன், இப்படத்தை உருவாக்கியதில் உதவிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக, ஒளிப்பதிவாளர் எம்.எஸ். பிரபு, நடிகர் ஜெயப்பிரகாஷ் மற்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஆகியோர் தங்களுக்கு வழங்கிய ஆதரவை நினைவுகூர்ந்தார்.

உதவி இயக்குநர்களின் உழைப்பும் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளின் முக்கியத்துவமும் குறித்து பேசிய அவர், தன்னுடைய நீண்ட நாள் தேடலுக்குப் பிறகு உருவான படம் ‘ஆல் பாஸ்’ என்று குறிப்பிட்டார். வடசென்னையை இதுவரை காட்டப்படாத ஒரு கோணத்தில் பதிவு செய்திருப்பதாகவும், படம் பார்வையாளர்களை திருப்திப்படுத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

விழாவில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், ‘ஆல் பாஸ்’ படத்தைப் பாராட்டியதுடன், சினிமாவில் பணியாற்றும் ஒவ்வொரு கலைஞருக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சினிமாவில் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் உழைப்பை விளம்பரங்களில் உரிய முறையில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், தன்னுடைய முந்தைய படமான ‘கருப்பு’திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தான் நடித்திருந்த நடனக் காட்சி நீக்கப்பட்டதாகவும், அது தொடர்பாக தனக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சூர்யா, கார்த்தி ஆகியோரைக் குறிப்பிட்டு, “சூர்யா, கார்த்தி பெரிய நடிகர்கள். அவர்கள் வாழட்டும். ஆனால் எங்களையும் வாழ விடுங்கள்” என்று காட்டமாகத் தெரிவித்தார்.

சினிமாவில் பல ஆண்டுகளாக நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வரும் தனக்கு தொடர்ந்து வேலை வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும், கலைஞர்களின் உழைப்பை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ‘ஆல் பாஸ்’ படக்குழுவினரிடையே சிறப்பான ஒருங்கிணைப்பும் நேர்மறையான சூழலும் இருந்ததாக குறிப்பிட்டார்.

வடசென்னை என்றாலே ஆக்ஷன், வன்முறை, அடிதடி போன்ற பிம்பம் தமிழ் சினிமாவில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் வாழும் மக்களின் இயல்பான வாழ்க்கையை இப்படம் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

குறுகலான தெருக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதிகளில் சுமார் 45 நாட்கள் படப்பிடிப்புநடைபெற்றிருப்பதையும் அவர் குறிப்பிட்டார். புதிய தயாரிப்பாளராக களமிறங்கியுள்ள மோகனா. ஆர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், படம் வெற்றி பெற வேண்டும் என்றும் கூறினார்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், ‘ஆல் பாஸ்’ படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை பாராட்டினார்.

சில திரைப்படங்களில் அதிகப்படியான வன்முறை இடம்பெறும்போது ஏற்படும் மனநிலைக்கு மாறாக, ‘ஆல் பாஸ்’திரைப்படம் மன அமைதியை வழங்கும் வகையில் உருவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். படத்தின் கலை இயக்குநர் ஜெயசீலனின் பணியையும் அவர் வெகுவாக பாராட்டினார்.

மேலும், இயக்குநர் மைதீன் வடசென்னையின் வாழ்வியலை இதுவரை பார்க்காத ஒரு கோணத்தில் பதிவு செய்துள்ளதாகவும், படம் அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களைப் பாராட்டியதுடன், படத்தின் தொழில்நுட்பக் குழுவினரின் பணியையும் பாராட்டினார்.

துஷ்யந்த் தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பதாகவும், ஜனனி அழகாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். ஜேம்ஸ் வசந்தனின் இசையும் பாடல்களும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளதாகக் கூறி, ‘ஆல் பாஸ்’திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தினார்.

இயக்குநர் விக்ரமன் பேசுகையில், நடிகர் ஜெயப்பிரகாஷுடனான தனது நீண்டகால நட்பை நினைவுகூர்ந்தார். படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் சிறப்பாக இருப்பதாகவும், படக்குழுவினர் அனைவருக்கும் வெற்றி கிடைக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசுகையில், இயக்குநர் மைதீன் முழுக் கதையையும் விவரமாகச் சொன்னதாகவும், அதில் தனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் ஒன்றை தேர்வு செய்து நடித்ததாகவும் கூறினார்.

வடசென்னையின் வாழ்வியலை மிகவும் இயல்பாக பதிவு செய்திருப்பதே இப்படத்தின் முக்கியமான சிறப்பு என்று குறிப்பிட்ட அவர், கதையில் வரும் குடும்பங்கள், குழந்தைகள், அவர்களுக்கிடையேயான உறவுகள், சந்தோஷம் மற்றும் சண்டைகள் என அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்கள் இயல்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நடிகை ஜனனி, இயக்குநர் மைதீன் முதன்முதலில் கதையைச் சொன்னபோதே அது தன்னை கவர்ந்ததாக தெரிவித்தார். குறிப்பாக கதையின் பின்னணி மற்றும் படப்பிடிப்பு நடைபெறவிருந்த இடங்கள் குறித்த இயக்குநரின் அணுகுமுறை தனக்கு மிகவும் பிடித்ததாகவும் கூறினார்.

படத்தில் தன்னுடன் பணியாற்றிய மூத்த கலைஞர்கள் மற்றும் சக நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்ததாகவும், படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

நடிகர் துஷ்யந்த், தனக்கு பாசிட்டிவான கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் மைதீன் மற்றும் தயாரிப்பாளர் மோகனா. ஆர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.

இப்படத்தில் தனது தந்தை ஜெயப்பிரகாஷுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்ததாக கூறிய அவர், இது தனது நான்காவது படம் என்றும், சிறு வயது முதலே தனக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்தார்.

ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, இயக்குநர் சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்ன பாலச்சந்திரன், மோகனா. ஆர், சத்யா, சஞ்சய், கோகுல், நிகில் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘பாண்டியநாடு’, ‘எதிர்நீச்சல்’ உள்ளிட்ட படங்களில் நடித்த சரத் லோகித்ஷவா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘பாபநாசம்’ புகழ் ரோஷன் பஷீர் மற்றும் ‘பைசன்’ படத்தில் நடித்த அருவி மதன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தில்ராஜு ஒளிப்பதிவு செய்ய, ‘சுப்ரமணியபுரம்’ புகழ் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்துள்ளார். மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். ‘பசங்க’ படத்தின் படத்தொகுப்பாளர் எஸ். பாஸ்கர் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஜெயசீலன். டி கலை இயக்குநராகவும், ஐ. ராதிகா நடன இயக்குநராகவும், மெட்ரோ மகேஷ் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

வடசென்னையின் ஆக்ரோஷமான பிம்பத்தைத் தாண்டி, அங்கு வாழும் மக்களின் இயல்பான வாழ்க்கை, உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘ஆல் பாஸ்’, அதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டின் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Comments (0)
Add Comment