மார்வெல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோவை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. ராபர்ட் டவுனி ஜூனியர் நடிக்கும் விக்டர் வான் டூம் / டாக்டர் டூம் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட இந்த புரோமோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிசம்பர் 18, 2026அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
D23: The Ultimate Disney Fan Event நிகழ்ச்சியில் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்புப் புரோமோ வெளியிடப்பட்டது. மார்வெல் ஸ்டுடியோஸ் தலைவர் கெவின் ஃபீஜ், அகாடமி விருது வென்ற நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர், நடிகர்கள் கிறிஸ் எவன்ஸ் மற்றும் ஹேலி அட்வெல் ஆகியோர் மேடையில் இணைந்து இந்த சிறப்பு புரோமோவை அறிமுகப்படுத்தினர்.
டாக்டர் டூமாக ராபர்ட் டவுனி ஜூனியர்
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இதுவரை முக்கியத்துவம் பெறாத டாக்டர் டூம் கதாபாத்திரம் இந்த புரோமோவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. அயர்ன் மேன் கதாபாத்திரத்தின் மூலம் MCU ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ராபர்ட் டவுனி ஜூனியர், தற்போது முற்றிலும் மாறுபட்ட வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றுவது படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக உள்ளது.
புரோமோவில் விக்டர் வான் டூமின் பின்னணி மற்றும் அவரது வில்லன் கதாபாத்திரத்திற்கான முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வனேசா கிர்பி நடிக்கும் சூ ஸ்டார்ம் கதாபாத்திரமும் டாக்டர் டூமின் கதைக்களத்தில் முக்கிய பங்கு வகிக்கும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளன.
அதேபோல், டாக்டர் டூம் மற்றும் தோர் இடையேயான மோதலையும் புரோமோ முன்னிலைப்படுத்தியுள்ளது. இதனால் MCU-வில் இதுவரை காணப்படாத பிரம்மாண்டமான வில்லன்–சூப்பர் ஹீரோ மோதலுக்கு இப்படம் வழிவகுக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
மூன்று பிரபஞ்சங்கள்… ஒரே மிகப்பெரிய அச்சுறுத்தல்!
‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் கதைக்களத்தில் மூன்று வெவ்வேறு பிரபஞ்சங்களைச் சேர்ந்த சூப்பர் ஹீரோக்கள் ஒன்றிணைகின்றனர். இதுவரை அவர்கள் எதிர்கொண்டிராத அளவுக்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல் உருவாகும் நிலையில், தங்களது உலகங்களை காப்பாற்ற அவர்கள் ஒன்றாக போராட வேண்டிய சூழல் உருவாகிறது.
வெவ்வேறு உலகங்கள் ஒன்றோடொன்று மோதும் நிலையில், உயிர்வாழ்வதற்கான மிகப்பெரிய போராட்டமே படத்தின் மையமாக அமைகிறது. இந்தக் கதைக்களத்துடன் டாக்டர் டூம் இணைவது படத்தின் பிரம்மாண்டத்தை மேலும் அதிகரித்துள்ளது.
மீண்டும் இணையும் முன்னணி மார்வெல் நட்சத்திரங்கள்
மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். கெவின் ஃபீஜ், லூயிஸ் டி’எஸ்போசிடோ மற்றும் ஜொனாதன் ஸ்வார்ட்ஸ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
இப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல், பால் ரூட், ஆண்டனி மேகி, ஃப்ளாரன்ஸ் பக், வனேசா கிர்பி, எபான் மோஸ்-பேக்ராக், வயாட் ரஸ்ஸல், சானிங் டாட்டம், சிமு லியு, இயான் மெக்கெல்லன், ஹேலி அட்வெல், டாம் ஹிடில்ஸ்டன், ஜேம்ஸ் மார்ஸ்டன், பேட்ரிக் ஸ்டீவர்ட், ஜோசப் க்வின், செபாஸ்டியன் ஸ்டான், டேவிட் ஹார்பர், லெட்டிடியா ரைட், லூயிஸ் புல்மேன், கெல்சி கிராமர், கேத்ரின் நியூட்டன், டேனி ராமிரெஸ், வின்ஸ்டன் டியூக், ஆலன் கம்மிங், ஹன்னா ஜான்-காமன், ரெபெக்கா ரோமிஜன், மேபெல் கேடனா மற்றும் டெனோச் ஹுவேர்டா மெஜியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முன்னணி மார்வெல் கதாபாத்திரங்களுடன் பழைய தலைமுறை நடிகர்களும் மீண்டும் இணைந்திருப்பது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
டிசம்பர் 18-ல் உலகம் முழுவதும் வெளியீடு
டாக்டர் டூமாக ராபர்ட் டவுனி ஜூனியரின் புதிய அவதாரம், பல பிரபஞ்சங்களைச் சேர்ந்த சூப்பர் ஹீரோக்களின் கூட்டணி மற்றும் பிரம்மாண்டமான மோதல்கள் என பல்வேறு அம்சங்களுடன் உருவாகி வரும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’, மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த முக்கிய திரைப்படமாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டிசம்பர் 18, 2026 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. புதிய புரோமோ வெளியாகியுள்ள நிலையில், டாக்டர் டூமாக ராபர்ட் டவுனி ஜூனியர் எப்படி MCU-வின் அடுத்த மிகப்பெரிய வில்லனாக உருவெடுக்கிறார் என்பதைக் காண ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.