நவீன விளம்பர உலகம் மற்றும் மார்க்கெட்டிங் தந்திரங்கள், ஒரு சாதாரண மனிதனின் எண்ணங்களிலும் வாழ்க்கையிலும் ஏற்படுத்தும் தாக்கத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘CUSTOMER’ குறும்படம் இன்று வெளியாகிறது. கிரிஸ் ஸ்ரீநாத் தயாரிப்பில், விஷ்ணு டாக்கீஸ் வழங்கும் இந்தக் குறும்படம், ஆகஸ்ட் 18 மாலை 6 மணிக்கு விஷ்ணு டாக்கீஸ் யூடியூப் சேனலில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது.
டி. விக்னேஷ் குமார் எழுதி இயக்கியுள்ள ‘CUSTOMER’, நுகர்வோர் மனநிலையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சமூகப் பார்வை கொண்ட குறும்படமாகும். “ஒரு பொருளை நீங்கள் வாங்குவதில்லை; அந்தப் பொருள்தான் உங்களை வாங்குகிறது” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
கதையின் நாயகியான தேவி, தனது கணவர் மற்றும் மகனுடன் வாழும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். வேலை மற்றும் குடும்பப் பொறுப்புகளுக்கு இடையே தனது வாழ்க்கையை இயல்பாகக் கொண்டு செல்லும் அவள், தனது தோற்றம் குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை. ஆனால், தொடர்ந்து அவள் கண்முன்னே தோன்றும் முடி வளர்க்கும் எண்ணெய் விளம்பரங்கள், அவளுக்குள் இருந்த ஒரு சிறிய எண்ணத்தை படிப்படியாகக் குறையாக மாற்றுகின்றன.
சுற்றியிருப்பவர்களின் கருத்துகள், சமூகத்தின் பார்வை மற்றும் குடும்பத்தினரின் எதிர்பார்ப்புகள் ஆகியவை தேவியின் மனதில் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. ஒரு கட்டத்தில், அந்த முடி வளர்க்கும் எண்ணெயை வாங்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் வலுப்பெறுகிறது. ஆனால், அது வெறுமனே ஒரு பொருளை வாங்கும் முடிவாக இல்லாமல், விளம்பரங்கள் மற்றும் மார்க்கெட்டிங் மூலம் அவளது மனதில் உருவாக்கப்பட்ட தேவையின் வெளிப்பாடாக மாறுகிறது.
இந்தச் சூழ்நிலையின் பின்னணியில் இருக்கும் மார்க்கெட்டர் விக்னேஷ், மனிதர்களின் ஆசை, பயம் மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்றவற்றை ஆராய்ந்து, அவற்றையே விற்பனைக்கான வாய்ப்புகளாக மாற்றுபவராக சித்தரிக்கப்படுகிறார். அவரது பார்வையில் ஒவ்வொரு மனிதரும் ஒரு ‘Customer’. இறுதியில் தேவி அந்தப் பொருளை வாங்குகிறாரா, அல்லது மார்க்கெட்டிங் உருவாக்கிய மனநிலையிலிருந்து விடுபடுகிறாரா என்பதே குறும்படத்தின் மீதிக்கதையாக அமைந்துள்ளது.
‘CUSTOMER’ குறும்படத்தில் பவித்ரா ஜனனி, அருண், ஸ்ரீதர் சந்திரா மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தினேஷ் சித்தன் இணை ஆசிரியராக பணியாற்றியுள்ளார். லூசிபர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷோகன் பாபு பின்னணி இசையமைத்துள்ளார்.
மேலும், சுபாஷ் சந்திர போஸ் கென்னடி இணை இயக்குநராகவும், எஸ். அகமது ஹமீத் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளனர். சுப்ரமணியம் போஸ்டர் வடிவமைப்பை மேற்கொண்டுள்ளார். மக்கள்தொடர்பு பணிகளை ரேகா, ரான் டி ஆர்ட் சார்பில் கவனித்துள்ளார்.
விளம்பரங்கள் ஒரு பொருளை விற்பனை செய்வதைத் தாண்டி, மனிதர்களின் மனதில் தேவைகளை எவ்வாறு உருவாக்குகின்றன என்ற கேள்வியை முன்வைக்கும் ‘CUSTOMER’, சமூகத்தில் நிலவும் நுகர்வோர் கலாச்சாரத்தை வித்தியாசமான கோணத்தில் பதிவு செய்யும் முயற்சியாக அமைந்துள்ளது. இன்று மாலை 6 மணி முதல் விஷ்ணு டாக்கீஸ் யூடியூப் சேனலில் இந்தக் குறும்படத்தைப் பார்க்கலாம்.