சிதாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தி ஒன் சூர்யா நடிப்பில் உருவாகி ஆகஸ்ட் 14 அன்று வெளியான ‘விஸ்வநாத் & சன்ஸ்’திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் படக்குழுவினர் பங்கேற்ற பிரத்யேக நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, மமீதா பைஜூ, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் பேசுகையில், நீண்ட காலமாக ஊடகம், வானொலி மற்றும் மேடை நிகழ்ச்சிகளுடன் பயணித்து வந்த தனக்கு, பாடலாசிரியராக மேடையேறுவது மிகவும் முக்கியமான தருணம் என்றார். இந்தப் படத்தில் அருண்ராஜா காமராஜுடன் இணைந்து பாடல்களை எழுதியிருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
நடிகை பவானி ஸ்ரீ பேசுகையில், படத்தில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், ‘மேக்னா’ கதாபாத்திரம் சிறப்பாக எழுதப்பட்டிருந்ததாகக் கூறினார். சூர்யாவுடன் இணைந்து நடிப்பது குறித்து ஆரம்பத்தில் தனக்கு பதற்றம் இருந்ததாகவும், படப்பிடிப்பு தளத்தில் அவர் வழங்கிய ஊக்கமும் ஆதரவும் அந்த பயத்தைப் போக்கியதாகவும் தெரிவித்தார். ராதிகா சரத்குமார் மற்றும் மமீதா பைஜூவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தையும் அவர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.
ராதிகா சரத்குமார் பேசுகையில், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு நன்றி தெரிவித்தார். இன்றைய காலகட்டத்தில் பார்வையாளர்களின் கவனத்தை நீண்ட நேரம் தக்கவைத்துக் கொள்வது சவாலான விஷயமாக இருக்கும் நிலையில், அன்பு, பாசம் மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு நிதானமாகக் கதை சொல்லி வெற்றி பெற்றிருப்பது பெருமை அளிப்பதாகக் கூறினார்.
படத்தின் கதையை வெங்கி அட்லூரி கூறியபோது, இந்தக் காட்சிகளில் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டாரா என தான் ஆச்சரியத்துடன் கேட்டதாகவும், கதையின் மீது நடிகர் வைத்திருந்த நம்பிக்கை தன்னை வியக்க வைத்ததாகவும் ராதிகா தெரிவித்தார். மமீதா பைஜூ கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டதும் தனக்கு மகிழ்ச்சி அளித்ததாகக் கூறிய அவர், படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனக்கான நியாயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகப் பாராட்டினார்.
ஒரு நல்ல குடும்பத் திரைப்படம் பார்வையாளர்களின் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்றும், அந்த வகையில் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஒரு முழுமையான குடும்பமாக இணைந்து உருவாக்கப்பட்ட படம் என்றும் ராதிகா சரத்குமார் தெரிவித்தார். படத்தில் உள்ள புத்திசாலித்தனமான எழுத்து மற்றும் கதாபாத்திரங்களின் இயல்பான உரையாடல்கள் படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நடிகை மமீதா பைஜூ, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து, தனக்கு ஆதரவாகவும் வழிகாட்டியாகவும் இருந்த அனைவருக்கும் நன்றி கூறினார். படத்தை இதுவரை பார்க்காதவர்கள் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என்றும், படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது பார்வையாளர்களுக்கு ஒரு மனநிறைவு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், வெங்கி அட்லூரியுடன் ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தில் இணைந்துள்ளதாகக் கூறினார். இந்த மூன்று படங்களும் வெற்றிபெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்தக் கூட்டணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
‘வாத்தி’ திரைப்படம் மூலம் தனக்கு தெலுங்கு திரையுலகில் புதிய வாய்ப்புகள் கிடைத்ததற்கு வெங்கி அட்லூரியும் ஒரு முக்கிய காரணம் என்று கூறிய ஜி.வி. பிரகாஷ், தற்போது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இசைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கிடைத்து வரும் பாராட்டுகள் உண்மையான வெற்றியாக உணரப்படுவதாக தெரிவித்தார்.
இயக்குநர் வெங்கி அட்லூரி பேசுகையில், படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினருக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ படங்களைத் தொடர்ந்து தனக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கிய தமிழ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ தனது தமிழ் இயக்குநர் பயணத்தில் முக்கியமான படமாக அமைந்துள்ளதாகக் கூறினார்.
படத்தின் பத்திரிகையாளர் காட்சி முடிந்த பிறகு ஊடகத்தினர் என்ன சொல்லப் போகிறார்கள் என்ற பதற்றத்தில் தான் இருந்ததாகவும், ஆனால் படம் முடிந்ததும் பத்திரிகையாளர்கள் பாராட்டி, கை குலுக்கி, கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்திய தருணத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றும் வெங்கி அட்லூரி தெரிவித்தார்.
படத்தில் நடித்த அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், மமீதா பைஜூவை தனது தங்கையாகக் கருதுவதாகவும், மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் கூறினார்.
ஜி.வி. பிரகாஷ் குமாருடனான தனது நட்பைப் பற்றி பேசிய வெங்கி அட்லூரி, ‘வாத்தி’ படத்தில் தொடங்கிய அந்தப் பயணம் தற்போது உண்மையான சகோதரத்துவமாக மாறிவிட்டதாகக் கூறினார். ஒரு பாடலை முழுமையாக உருவாக்கிய பிறகும் மாற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டால் கூட எந்த தயக்கமும் இல்லாமல் புதிய பாடலை உருவாக்கித் தரும் அவரது அர்ப்பணிப்பை வெங்கி பாராட்டினார்.
சூர்யா நிகழ்ச்சியில் நேரில் இல்லாவிட்டாலும், அவரது அன்பும் ஆதரவும் படக்குழுவினருடன் எப்போதும் இருப்பதாக வெங்கி அட்லூரி தெரிவித்தார். குடும்பக் கதையை கேட்டவுடனேயே, எந்தவித எதிர்பார்ப்புகளையும் முன்வைக்காமல் சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டது அவரது துணிச்சலையும் கதையின் மீதான நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.
“சூர்யா ரசிகர்களுக்கு எப்போதும் புதுமையான அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதையே முக்கியமாகக் கருதுகிறார். அது ரசிகர்கள் மீது அவர் வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு,” என்று கூறிய வெங்கி அட்லூரி, திரையரங்குகளில் விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டிற்கும், படத்தை ரசிக்கும் ரசிகர்களின் ஒவ்வொரு கரவொலிக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடிவரும் ‘விஸ்வநாத் & சன்ஸ்’, குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் இயல்பான கதை சொல்லலால் அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமும் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறது.