நல்ல கதைகளுக்கு தமிழ் ரசிகர்கள் எப்போதும் ஆதரவு; ‘மொத ராத்திரி’ மீது தயாரிப்பாளர்கள் நம்பிக்கை!

தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை தொடர்ந்து மாறிவரும் நிலையில், வலுவான கதைக்களம் மற்றும் உணர்வுப்பூர்வமான அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், குடும்ப உறவுகளையும் பொழுதுபோக்கையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’திரைப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பான் இந்திய அளவிலான பிரம்மாண்ட திரைப்படங்களுடன், குடும்பம் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட கதைகளையும் தொடர்ந்து தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தமிழ் ரசிகர்களின் மாறிவரும் ரசனைக்கு ஏற்ப இந்தப் படத்தை உருவாக்கியுள்ளது.

நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ள இப்படத்தின் மூலம் ராஜா கருப்பசாமி இயக்குநராக அறிமுகமாகிறார். ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் கூறுகையில், “தமிழ் ரசிகர்கள் நல்ல கதைகளை எப்போதுமே கொண்டாடுவார்கள். குறிப்பாக, இந்த ஆண்டு வெளியான நல்ல கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களுக்கு ரசிகர்கள் தங்களை பொருத்திக் கொண்டதால் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு தயாரிப்பு நிறுவனமாக, பிரம்மாண்டமான பான் இந்திய வெற்றிப் படங்கள் முதல் குடும்பம், உணர்வுகள் மற்றும் வலுவான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வரை பல்வேறு வகையான சினிமாவை வழங்குவதில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். அந்த நம்பிக்கையிலிருந்துதான் ‘மொத ராத்திரி’ திரைப்படம் உருவாகியுள்ளது” என்றனர்.

மேலும் அவர்கள் கூறுகையில், “ரிஷிகாந்த், அனிஷ்மா மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினரும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ராஜா கருப்பசாமி தனது தெளிவான அணுகுமுறை, படைப்பாற்றல் மற்றும் கதை சொல்லும் திறன் ஆகியவற்றால் எங்களை மிகவும் கவர்ந்துள்ளார். கதாபாத்திரங்களை அவர் கையாண்ட விதத்திலிருந்து படப்பிடிப்புத் தளத்தில் செயல்பட்ட விதம் வரை, ஒரு அறிமுக இயக்குநருக்குரிய அனுபவத்தைத் தாண்டிய முதிர்ச்சியை வெளிப்படுத்தினார். திட்டமிட்ட காலத்திற்குள் அவர் படத்தை நிறைவு செய்துள்ளார். ஒட்டுமொத்த படக்குழுவினரும் இணைந்து உருவாக்கியுள்ள இந்த ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றனர்.

‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் ரிஷிகாந்த் கதாநாயகனாக நடித்திருக்க, அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ. வெங்கடேஷ், பகவதி பெருமாள், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்ரியா, சுமித்ரா தேவி எல்., வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன் மற்றும் கௌஷிக் கபிலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பரத் சங்கர் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவு செய்துள்ளார். அசோக் அர்ஜுனன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். பூர்ணிமா ராமசாமி ஆடை வடிவமைப்பாளராகவும், ஏ. பாலுமகேந்திரா கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

புதிய களத்தையும் புதிய திறமையாளர்களையும் அறிமுகப்படுத்தும் முயற்சியாக உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’, குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை இணைக்கும் ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் 21, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Comments (0)
Add Comment