ஸ்பீட் ரீல்ஸ் ஸ்டுடியோவின் முதல் தயாரிப்பாக உருவாகி வரும் ‘தாரகை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெண்களின் வாழ்க்கை, பயணம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சூழல்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் நடிகை கௌரி கிஷன் கதையின் நாயகியாக நடித்துள்ளார்.
‘தாரகை’ திரைப்படத்தை க்ரிஷ் எழுதி இயக்குகிறார். காளி வெங்கட் மற்றும் ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கௌரி கிஷன் மையமாக இடம்பெற்றுள்ளார். அவரைச் சுற்றி வெவ்வேறு வயது மற்றும் வாழ்க்கைப் பின்னணியைச் சேர்ந்த பல பெண்கள் பயணிப்பது போன்ற காட்சியமைப்பு இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகும் ‘தாரகை’, பயணம், உறவுகள், வாழ்க்கைத் தேர்வுகள் மற்றும் சுதந்திரம் தொடர்பான பல்வேறு கேள்விகளை முன்வைக்கும் படமாக உருவாகி வருகிறது. பெண்களின் வாழ்க்கையில் அவர்கள் தேர்ந்தெடுக்கும் பாதைகள் மற்றும் அந்தப் பயணங்களில் சந்திக்கும் அனுபவங்களை உணர்வுப்பூர்வமாக பதிவு செய்யும் முயற்சியாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். சுந்தர் சுகுமாரன் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். அலன் பி. ஜான் படத்தொகுப்புப் பணிகளை கவனிக்கிறார். அருண்சங்கர் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
ஸ்பீட் ரீல்ஸ் ஸ்டுடியோ தயாரிப்பில், க்ரிஷ் எழுதி இயக்கும் ‘தாரகை’ திரைப்படம், கௌரி கிஷனை மையமாகக் கொண்டு பல பெண்களின் வாழ்க்கைப் பாதைகளையும் பயணங்களையும் இணைக்கும் புதிய கதைக்களத்துடன் உருவாகி வருகிறது.
‘தாரகை’ — ஒரு பயணம்… ஒரு தேடல்… பல பெண்களின் பாதைகள்.