யாமி கெளதமின் புதிய ஃபேன்டஸி அவதாரம்… ‘நய்யி நவெல்லி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள புதிய ஃபேன்டஸி குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படம் ‘நய்யி நவெல்லி’. யாமி கெளதம் தர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். பண்டிகைக் காலத்தை முன்னிட்டு குடும்பத்தினர் அனைவரும் திரையரங்குகளில் கண்டு ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் 16ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஹிமான்ஷு ஷர்மா மற்றும் திவ்ய நிதி ஷர்மா கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஃபேன்டஸி, நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘நய்யி நவெல்லி’, பார்வையாளர்களை வித்தியாசமான பொழுதுபோக்கு உலகத்திற்குள் அழைத்துச் செல்லவுள்ளது.

குழப்பங்கள் நிறைந்த ஒரு மீரட் குடும்பத்திற்குள் நுழையும் கதாநாயகி, அந்தக் குடும்பத்தின் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றுகிறாள். ஆனால், அவளது கணவரின் தம்பிக்கு மட்டும் அவள் மீது சந்தேகம் எழுகிறது. அனைவருக்கும் அன்பாகவும், சிறப்பாகவும் தோன்றும் அந்த அண்ணி உண்மையில் ஒரு சூனியக்காரியாக இருக்கலாமா என்ற கேள்வியை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது.

படம் குறித்து அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் இந்திய SVOD ஒரிஜினல்ஸ் பிரிவின் இயக்குநரும் தலைவருமான நிகில் மாதோக் கூறுகையில், “‘நய்யி நவெல்லி’ தசரா பண்டிகைக் காலத்திற்காகவே உருவான திரைப்படம் என்ற உணர்வு எங்களுக்கு இருந்தது. யாமி கெளதம் தர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனந்த் எல். ராய் மற்றும் ஹிமான்ஷு ஷர்மாவுடன் முதல் முறையாக இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. இந்த தசரா பண்டிகையில் குடும்ப பார்வையாளர்களின் முக்கியமான தேர்வாக இப்படம் இருக்கும் என நம்புகிறோம்” என்றார்.

தயாரிப்பாளர் ஆனந்த் எல். ராய் கூறுகையில், “‘நய்யி நவெல்லி’ ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் கதையாக உருவாகியுள்ளது. ஃபேன்டஸி, நகைச்சுவை மற்றும் சாகசம் ஆகியவற்றை ஒன்றிணைத்து குடும்ப பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். கதாபாத்திரத்திற்குத் தேவையான அன்பும் குறும்புத்தனமும் யாமி கெளதம் தரின் நடிப்பில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது” என்றார்.

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘நய்யி நவெல்லி’, நகைச்சுவை, குழப்பம், சாகசம் மற்றும் பண்டிகை கொண்டாட்டங்களை இணைக்கும் முழுமையான குடும்ப பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ளது. பாலாஜி மோகன் இயக்கத்தில், யாமி கெளதம் தர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் அக்டோபர் 16, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Comments (0)
Add Comment