ரியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் தயாரிப்பாளர் திருமாறன் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘கிட்டி’. வித்தியாசமான சைக்காலஜிக்கல் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை நெடுமாறன் மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
‘முருகா’ அசோக் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படம், வழக்கமான குற்ற விசாரணை பாணியிலிருந்து மாறுபட்டு, கதாநாயகனை மையமாகக் கொண்டு நகரும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ளது. பரபரப்பு, சஸ்பென்ஸ் மற்றும் உளவியல் சார்ந்த அம்சங்கள் இணைந்த இப்படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தில் அசோக் மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த சவாலான கதாபாத்திரத்திற்காக அவர் சிறப்பான உழைப்பை வழங்கியுள்ளதாகவும், ‘கிட்டி’ அவரது திரையுலகப் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், இப்படத்தில் நிஷா, சங்கவி மற்றும் சிமு அத்வானி ஆகிய மூன்று நடிகைகள் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ‘ஊமை விழிகள்’ திரைப்படத்தின் இயக்குநர் ஆர். அரவிந்த்ராஜ் முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரபல நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றுள்ளதுடன், தயாரிப்பாளர் திருமாறனும் விசாரணை அதிகாரியான காவல்துறை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
கும்பகோணம், கடலூர், தரங்கம்பாடி மற்றும் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன.
‘கிட்டி’ திரைப்படத்திற்கு காதர் இசையமைக்க, வி.எஸ். வேலன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கார்த்திக் பாண்டியன் படத்தொகுப்பை கவனிக்கிறார். ராக் சங்கர் நடன இயக்குநராகவும், ‘பாப்புலர்’ பாபு சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர். வாலி கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். பாடல்களுக்கு ப்ரியன், சீர்காழி சிற்பி மற்றும் தமிழ்மகன் ஆகியோர் வரிகளை எழுதியுள்ளனர்.
விறுவிறுப்பான திரைக்கதை, சைக்காலஜிக்கல் திரில்லர் அம்சங்கள் மற்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களுடன் உருவாகியுள்ள ‘கிட்டி’, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.