“கவுண்டமணி, பாலையாதான் எனது ரோல் மாடல்” – அப்துல் லீ பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் தனது தனித்துவமான நடிப்பால் கவனம் ஈர்த்துள்ள நடிகர் அப்துல் லீ, தனது திரைப்பயணம், நடிப்பு மீதான ஆர்வம் மற்றும் தன்னை ஊக்கப்படுத்திய திரையுலக ஆளுமைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

யூடியூப் ஸ்கெட்ச் வீடியோக்கள் மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய அப்துல் லீ, பின்னர் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கி இன்று பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். தனது பெயருக்குப் பின்னால் இருக்கும் ‘லீ’ என்ற அடையாளத்திற்கும் சுவாரஸ்யமான பின்னணி உள்ளது. உலகப் புகழ்பெற்ற ஸ்டான் லீ மற்றும் ஸ்பைக் லீ ஆகிய இரு ஆளுமைகளின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாகவே தனது பெயருடன் ‘லீ’ என்பதை இணைத்துக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் பயணித்து வரும் அப்துல் லீக்கு, பழம்பெரும் நடிகர்கள் கவுண்டமணி மற்றும் பாலையா ஆகியோர் மிகப்பெரிய உத்வேகமாக உள்ளனர். குறிப்பாக, நகைச்சுவை கதாபாத்திரங்களுக்குள் கூட வித்தியாசமான உணர்வுகளையும் எதிர்மறை சாயல்களையும் வெளிப்படுத்தி, அதே நேரத்தில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் அவர்களின் நடிப்பு பாணி தனக்கு மிகவும் பிடிக்கும் என்கிறார்.

வேலம்மாள் பள்ளியின் முன்னாள் மாணவரான அப்துல் லீ, பொறியியல் பட்டம் பெற்றவர். இதுவரை 35-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், தனது திரைப்பயணத்தில் பல்வேறு அனுபவங்களைப் பெற்றுள்ளார். சமீபத்தில் வெளியான ‘ஜி.டி.என்.’, ‘கட்டா குஸ்தி 2’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், ‘ஹார்ட் பீட்’, ‘லோக்கல் டைம்ஸ்’ போன்ற இணையத் தொடர்களிலும் அவர் நடித்துள்ளார்.

‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் அவரது நடிப்பைப் பார்த்த நடிகர் சூரி, “திரையில் உங்களைப் பார்த்தபோது என் மாமா நினைவுக்கு வந்தார்” என்று பாராட்டியதாகவும், அந்த வார்த்தைகள் தனது திரைப்பயணத்தில் மிகவும் சிறப்பான தருணங்களில் ஒன்றாக அமைந்ததாகவும் அப்துல் லீ மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர் ராஜா கருப்புசாமிக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், படத்தின் கதாநாயகன் ரிஷிகாந்துடன் தனக்கு 13 ஆண்டுகளுக்கும் மேலாக நட்பு இருப்பதாகவும், ‘மொத ராத்திரி’ படப்பிடிப்பின்போது அவர் அளித்த ஆதரவு மறக்க முடியாதது என்றும் கூறியுள்ளார்.

‘மொத ராத்திரி’ திரைப்படம் தனது திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான படியாக அமைந்துள்ளதாகக் கூறும் அப்துல் லீ, இனி நகைச்சுவை மட்டுமின்றி குணச்சித்திரம், எதிர்மறை கதாபாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பரிமாணங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே தனது விருப்பம் என தெரிவித்துள்ளார்.

கவுண்டமணியின் நகைச்சுவை பாணியை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு, தனது தனித்துவமான நடிப்பு பயணத்தை தொடர்ந்து கட்டமைத்து வரும் அப்துல் லீக்கு, ‘மொத ராத்திரி’ ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரது அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

Comments (0)
Add Comment