இருமுடி கட்டு – திரைப்பட விமர்சனம்

ரவி தேஜா வழக்கமாகக் கொண்டாடப்படும் அதிரடி மற்றும் மாஸ் கதாபாத்திரங்களில் இருந்து விலகி, ஒரு வித்தியாசமான உணர்வுலகத்திற்குள் பயணித்திருக்கும் திரைப்படம் ‘இருமுடி கட்டு’. இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில், ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், சாய் குமார், பேபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், அப்பா–மகள் உறவு, குற்றப் பின்னணி, மனமாற்றம் மற்றும் ஐயப்ப தீட்சை ஆகியவற்றை இணைத்து ஒரு எமோஷனல் ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது.

குடிப்பழக்கம் கொண்ட ஒரு வன்முறை மிக்க மனிதனாக தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார் ரவி தேஜா. தன் மகள் மீது அதீத பாசம் கொண்ட அவர் அவளுக்காக வருடா வருடம் ஐயப்ப சுவாமிக்கு மாலை போட்டு 41 நாட்கள் விரதம் இருப்பவராக இருக்கிறார். தன் மகள் மற்றும் அல்லாது தனது ஊரில் இருக்கும் அனைத்து பெண் குழந்தைகளையும் தனது சொந்த மகள் போல் பாவித்து அவர்களுக்கு பிரச்சனை வரும் போது முதல் ஆளாக சென்று அதை தட்டி கேட்கவும் செய்கிறார். அப்படி தனக்கு தெரிந்த பெண்ணிற்கு ஒரு அநியாயம் ஏற்படுகிறது அது என்ன, அது இவர்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது மற்றும் அந்த கயவர்கள் யார் என்பதே மீதி கதை.

படத்தின் மிகப்பெரிய பலம் அப்பா–மகள் உறவு. ரவி தேஜா மற்றும் பேபி நக்ஷத்ரா இணையும் காட்சிகளில் இருக்கும் பாசமும் நெருக்கமும் படத்திற்கு உணர்வுப்பூர்வமான அடித்தளத்தை உருவாக்குகின்றன. கதாநாயகனின் வாழ்க்கையில் மகள் ஏற்படுத்தும் மாற்றம், அவர் தனது பழைய வாழ்க்கையிலிருந்து வெளியே வர முயற்சிக்கும் விதம் ஆகியவை கதையின் முக்கிய உணர்வாக இருக்கின்றன. வெளியான பாடலும் புரமோஷனல் காட்சிகளும் இந்த உறவையும் கதாநாயகனின் மாற்றத்தையும் முன்கூட்டியே அழுத்தமாகக் காட்டியிருந்தன.

ரவி தேஜாவைப் பொறுத்தவரை, இந்தப் படம் அவரது வழக்கமான மாஸ் இமேஜிலிருந்து விலகிய ஒரு முயற்சி. ஆரம்பத்தில் ஒரு முரட்டுத்தனமான, கட்டுப்பாடற்ற மனிதராகத் தோன்றும் கதாபாத்திரம், மகளின் அன்பாலும் ஐயப்ப தீட்சையின் அனுபவத்தாலும் மாறும் விதத்தை அவர் நிதானமான நடிப்பால் கையாண்டுள்ளார். குறிப்பாக ஆக்‌ஷன் ஹீரோவாக மட்டுமே பார்க்கப்பட்ட ரவி தேஜாவை ஒரு தந்தையின் உணர்வுகளுடன் பார்ப்பது இந்தப் படத்தின் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று. அவரது கதாபாத்திரத்திற்காக மேற்கொள்ளப்பட்ட மாற்றமும் திரையில் கவனம் பெறுகிறது.

பிரியா பவானி சங்கர், ரவி தேஜாவின் மனைவி காவேரி கதாபாத்திரத்தில் கதையின் உணர்வுப் பகுதிக்கு துணை நிற்கிறார். அவருடைய கதாபாத்திரம் வெறும் கதாநாயகி என்ற எல்லைக்குள் நிற்காமல், குடும்பத்தின் உணர்வுப்பூர்வமான சூழலை உருவாக்கும் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. சாய் குமார், அஜய் கோஷ், ரமேஷ் இந்திரா, ஸ்வாசிகா உள்ளிட்ட துணை நடிகர்களும் கதையின் பின்னணியை வலுப்படுத்துகின்றனர்.

இயக்குநர் சிவா நிர்வாணாவின் அணுகுமுறையில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம், ஐயப்ப பக்தியை வெறும் கமர்ஷியல் ‘மாஸ்’ அம்சமாக பயன்படுத்தாமல், கதாநாயகனின் மனமாற்றத்துடன் இணைக்க முயன்றிருப்பது. ‘இருமுடி கட்டு’ பாடலில் கூட தீட்சை, பக்தி மற்றும் சபரிமலைப் பயணத்தின் ஆன்மிக உணர்வை முன்னிலைப்படுத்தியிருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை அந்தப் பகுதிகளுக்கு தேவையான பக்தி மற்றும் உணர்வை அழகாகக் கூட்டுகிறது. குறிப்பாக முதல் பாடலுக்கு அனந்துவின் குரல் நல்ல வலிமை சேர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் விஷ்ணு சர்மாவின் கேமரா வேலை படத்தின் கிராமப்புற மற்றும் இயற்கைச் சூழலை அழகாகப் பதிவு செய்கிறது. அருவி, காடு, கடலோரப் பகுதிகள் மற்றும் ஐயப்ப தீட்சை சார்ந்த காட்சிகள் கதையின் மனநிலையை உருவாக்க உதவுகின்றன. சாஹி சுரேஷின் தயாரிப்பு வடிவமைப்பும் இந்த உலகத்தை நம்பகமாக உருவாக்குவதில் பங்களிக்கிறது. பிரவீன் புடியின் படத்தொகுப்பு, குடும்ப உணர்வுகள் மற்றும் த்ரில்லர் அம்சங்களுக்கு இடையே கதையை நகர்த்துகிறது.

ஆக்‌ஷன் காட்சிகளுக்கு ராம்–லட்சுமண் மற்றும் ரியல் சதீஷ் அமைத்துள்ள சண்டைப் பகுதிகள் ரவி தேஜாவின் உடல்மொழிக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. அதே நேரத்தில், படம் முழுவதும் ஆக்‌ஷனை மட்டுமே நம்பாமல், கதாநாயகனின் உள்மாற்றத்தை முன்னிலைப்படுத்துவது நல்ல முடிவு.

ஆனால், திரைக்கதையில் சில பலவீனங்களும் இருக்கின்றன. கதையின் மையக் கருத்து சுவாரஸ்யமாக இருந்தாலும், அதன் பயணத்தில் சில பழக்கமான கிரைம்–பழிவாங்கல் அம்சங்கள் தென்படுகின்றன. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் சில திருப்பங்கள் அதிகம் கணிக்க முடியாததாக இல்லாமல் போவது படத்தின் தாக்கத்தை சற்று குறைக்கிறது.

இருப்பினும், ‘இருமுடி’யின் நோக்கம் வெறும் மாஸ் ஹீரோ படமாக நிற்பது அல்ல என்பது தெளிவாகத் தெரிகிறது.ஒரு மனிதனின் தவறான வாழ்க்கையிலிருந்து மனமாற்றம் நோக்கிய பயணத்தையும், ஒரு மகள் தனது தந்தையின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றத்தையும் மையமாக வைத்து சிவா நிர்வாணா கதை சொல்ல முயன்றுள்ளார். அதில் முழுமையான புதுமை இல்லாவிட்டாலும், உணர்வுப்பூர்வமான தருணங்கள் படத்தை தாங்குகின்றன. மேலும் பெண் குழந்தைகளை எப்படி தைரியமாக வளர்க்க வேண்டும் என்பதை இப்படம் விவரமாக சொல்கிறது. அதற்காக இயக்குநருக்கு ஒரு ராயல் சல்யூட்.

மொத்தத்தில், ‘இருமுடி’ ரவி தேஜாவின் வழக்கமான மாஸ் படங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு சற்று வித்தியாசமான அனுபவமாகவும், குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்‌ஷன் டிராமாவை விரும்புபவர்களுக்கு ஓரளவு திருப்தி தரக்கூடிய படமாகவும் அமைகிறது. ரவி தேஜாவின் மாறுபட்ட நடிப்பு, அப்பா–மகள் உறவு, ஐயப்ப தீட்சையின் பின்னணி மற்றும் ஜி.வி. பிரகாஷின் இசை ஆகியவை படத்தின் முக்கிய பலங்கள். 

ரேட்டிங்: 3 / 5

Comments (0)
Add Comment