தமிழ் இணையத் தொடர்களுக்கு உலகளவில் தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ இணையத் தொடர் குறிப்பிடத்தக்க சாதனையைப் பதிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி உலகளவில் வெளியான இந்த தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் திரில்லர் தொடர், வெளியான இரண்டு வாரங்களுக்குள் பிரைம் வீடியோவில் உலகளாவிய ஆங்கிலம் அல்லாத இணையத் தொடர்களின் தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், ஸ்கிரிப்டட் படைப்புகள் பிரிவில் உலகளவில் முதலிடத்தையும் இந்தத் தொடர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்களிடமும் தொடர் கவனம் பெற்றிருப்பது தமிழ் உள்ளடக்கத்திற்கு கிடைத்துள்ள மற்றொரு முக்கிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
முதல் சீசனான ‘வதந்தி: தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ சஸ்பென்ஸ் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட கதைக்களத்தால் ரசிகர்களிடையே தனித்துவமான வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இரண்டாவது சீசன், முதல் பாகத்தின் கதையைத் தொடராமல், புதிய வழக்கு, புதிய கதாபாத்திரங்கள் மற்றும் புதிய பின்னணியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வதந்திக்கும் உண்மைக்கும் இடையிலான முரணை மையமாகக் கொண்ட தொடரின் அடிப்படை அம்சம் இந்த சீசனிலும் தக்கவைக்கப்பட்டுள்ளது.
மதுரையை கதைக்களமாகக் கொண்டுள்ள இந்த புதிய சீசன், அந்தப் பகுதியின் கலாச்சார பின்னணியையும் புலனாய்வுக் கதையையும் இணைத்து பயணிக்கிறது. குறிப்பாக ஜல்லிக்கட்டு திருவிழாவின் பின்னணி கதையின் முக்கியமான சூழலாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் நடிகர் எம். சசிகுமார், நேர்மையும் உறுதியும் கொண்ட காவல் அதிகாரி எஸ்.ஐ. மூசா ராசாகதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நெடுஞ்சாலைத் திட்டப் பணிகள் தொடங்கும் பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்படுவதுடன் விசாரணை தொடங்குகிறது. இந்த வழக்கு பல எதிர்பாராத திருப்பங்களை எடுத்து, பிடிபடாத கைதியான ‘மணி’யை நோக்கி நகர்கிறது. உண்மையைத் தேடும் மூசா ராசாவின் பயணத்தில் அரசியல் அழுத்தங்கள், ஊடகங்களின் பரபரப்பு மற்றும் மனிதர்களின் பலவீனங்கள் என பல்வேறு அம்சங்கள் குறுக்கிடுகின்றன.
எட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்த இணையத் தொடரை ஆண்ட்ரூ லூயிஸ் உருவாக்கி, எழுதி இயக்கியுள்ளார். புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் கிரியேட்டிவ் புரொடியூசர்களாக இணைந்து, வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
சசிகுமாருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா மற்றும் அர்ஜுன் நந்தகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழில் உருவான இந்தத் தொடர் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், மேலும் 15 மொழிகளில் சப்டைட்டில்களுடனும் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவைத் தாண்டி 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களை இந்தத் தொடர் சென்றடைந்துள்ளது.
உலகளவில் வெளியாகும் பல்வேறு மொழி இணையத் தொடர்களுக்கு மத்தியில், பிரைம் வீடியோவின் டாப் 10 தரவரிசையில் இடம்பிடித்துள்ள ‘வதந்தி: தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’, தமிழ் ஒரிஜினல் இணையத் தொடர்களின் உலகளாவிய வரவேற்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. உலகளாவிய ஆங்கிலம் அல்லாத இணையத் தொடர்களில் இரண்டாவது இடத்தையும், ஒரிஜினல் சீரிஸ் தரவரிசையில் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ள இந்த வெற்றி, ‘வதந்தி’ தொடரின் அடுத்தடுத்த பயணத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.