அகில இந்திய லெஜன்ட் சரவணன் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் மகளிர் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1,000 மகளிருக்கு உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய அகில இந்திய லெஜன்ட் சரவணன் தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் தலைவர் முத்துத்துரை, “எங்களின் முக்கிய இலக்கு இந்தியா முழுவதும் இரண்டு கோடி ரசிகர்களையும் உறுப்பினர்களையும் இணைப்பதே”என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போது ஆன்லைன் மூலமாக மட்டும் சுமார் 10 லட்சம் உறுப்பினர்கள் ரசிகர் மன்றத்தில் இணைந்துள்ளதாகவும், அவர்களில் 7 லட்சம் பேர் ஆண்கள் மற்றும் 3 லட்சம் பேர் பெண்கள் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கையை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
லெஜன்ட் சரவணன் ரசிகர் நற்பணி மன்றம் மூலம் பல்வேறு சமூகநல உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் முத்துத்துரை குறிப்பிட்டார். நலிந்த மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு தையல் இயந்திரங்கள், உடைகள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“இரண்டு கோடி உறுப்பினர்களை இணைப்பது மட்டுமல்ல, சமூகத்தில் நலிந்த நிலையில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து உதவுவதும் எங்களின் முக்கிய நோக்கம்” என்றும் அவர் கூறினார்.
மகளிர் உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பம்சமாக, லெஜன்ட் சரவணனுக்காக அவரது ரசிகர்கள் உருவாக்கிய பிரத்யேக பாடல் ஒன்று வெளியிடப்பட்டது. ரசிகர்களின் உற்சாகமான ஆரவாரத்துக்கு மத்தியில் வெளியிடப்பட்ட இந்தப் பாடல் நிகழ்ச்சியில் கூடுதல் கவனம் பெற்றது.
நிகழ்ச்சியின் நிறைவாக, கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. ரசிகர் மன்றத்தின் உறுப்பினர் சேர்க்கை, மகளிர் பங்கேற்பு மற்றும் சமூகநலப் பணிகளை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றதாக மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
“இரண்டு கோடி ரசிகர்கள் – தொடரும் சமூகநலப் பயணம்” என்ற இலக்குடன் அகில இந்திய லெஜன்ட் சரவணன் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது.