மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவான ‘இருமுடி கட்டு’ திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. குடும்பம், நம்பிக்கை, உறவுகள் மற்றும் மனமாற்றம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ளனர். டி-சீரிஸ் பிலிம்ஸ் இப்படத்தை வழங்கியுள்ளது.
படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு திரைப்படம் குறித்த தங்களது அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் ஒய். ரவி சங்கர் பேசுகையில், “திரில்லர், குடும்பக் கதை மற்றும் ஆன்மீகம் என மூன்று விதமான அம்சங்களை இணைத்து இயக்குநர் சிவா நிர்வாணா இந்தக் கதையை எங்களிடம் கூறினார். இவ்வளவு வித்தியாசமான அம்சங்களை ஒரே கதையில் எப்படி இணைக்க முடியும் என்ற ஆச்சரியம் எங்களுக்கு இருந்தது. ஆனால் அதை மிக நேர்த்தியாக அவர் திரையில் கொண்டு வந்துள்ளார். ரவி தேஜா, பிரியா பவானி சங்கர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். தென்னிந்திய ரசிகர்கள் இந்தப் படத்தை ஒரு கல்ட் கிளாசிக்காக கொண்டாடுவார்கள் என்று நம்புகிறோம். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவிக்க வேண்டும்” என்றார்.
வசனகர்த்தா விஜய் பாலாஜி பேசுகையில், “மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் ஏற்கனவே இரண்டு படங்களில் பணியாற்றியுள்ளேன். மூன்று தந்தைகளை மையமாகக் கொண்டு நகரும் கதை இது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை. படம் நிச்சயம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும்” என்றார்.
பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், ரவி தேஜா நடித்த படத்திற்கு பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது தனக்கு எதிர்பாராத மகிழ்ச்சி அளித்ததாக தெரிவித்தார். படத்தின் கிளைமாக்ஸ் தன்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்ததாகவும், தான் எழுதிய மூன்று பாடல்களும் கதையுடன் இணைந்த முக்கியமான பாடல்களாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.
ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஷர்மா, ரவி தேஜா போன்ற முன்னணி நடிகரின் படத்தில் பணியாற்றியது பெருமையான அனுபவம் என்றும், இயக்குநர் சிவா நிர்வாணா கதையை மிகச்சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா, “‘இருமுடி கட்டு’ எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். என்னைத் தேர்வு செய்த இயக்குநர் சிவா சார், ரவி தேஜா சார், பிரியா பவானி சங்கர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
நடிகை பிரியா பவானி சங்கர் பேசுகையில், படத்தின் கதையைக் கேட்ட உடனேயே அதன் மீது மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டதாக தெரிவித்தார். “ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார் என்று தெரிந்தபோது பாடல்கள் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை மேலும் அதிகரித்தது. மிகப்பெரிய நட்சத்திர நடிகரின் படம் என்றாலும், படப்பிடிப்பின்போது கதையில் எந்தவிதமான தேவையற்ற மாற்றங்களும் செய்யாமல் இயக்குநர் சிவா நிர்வாணா சொன்ன கதையை அப்படியே உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்கு பெருமை. ரவி தேஜா சாருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இது வேறு மொழியில் இருந்து வந்த படம் என்று தமிழ் ரசிகர்கள் உணர மாட்டார்கள். மொழி ஒருபோதும் தடையல்ல. அப்பா–மகள் உறவு இருக்கும் அனைத்து இடங்களிலும் இந்தப் படம் வெற்றி பெறும்” என்றார்.
இயக்குநர் சிவா நிர்வாணா பேசுகையில், தமிழ் சினிமாவுடன் தனக்கு எப்போதும் ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பு இருப்பதாகக் கூறினார். பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் போன்ற இயக்குநர்களின் படங்கள் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், திரையரங்கிலிருந்து ரசிகர்கள் வெளியேறும்போது அந்தப் படத்திலிருந்து ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் திரைப்படங்களை உருவாக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
“குடும்பத்துடன் அமர்ந்து பார்த்து ரசிக்கக்கூடிய படமாக ‘இருமுடி கட்டு’ உருவாகியுள்ளது. படம் பார்த்து முடித்த பிறகு, உங்கள் மகள் மற்றும் மனைவியைப் பற்றி ஒரு கணம் யோசிப்பீர்கள். தெலுங்கில் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு வந்து பார்க்கிறார்கள். அதேபோல் தமிழிலும் ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து இந்தப் படத்தை ரசிக்க வேண்டும். பிரியா பவானி சங்கரின் கதாபாத்திரம் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ரவி தேஜா சாரையும் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒரு கோணத்தில் பார்க்க முடியும்” என்றார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், ஒரு படத்திற்கு இசையமைக்க அதன் கதை மிகவும் முக்கியம் என்று கூறினார். “‘பொல்லாதவன்’, ‘ராஜா ராணி’ படங்களின் கதையைக் கேட்டபோது அவை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அதேபோல் ‘இருமுடி கட்டு’ கதையைக் கேட்டபோதும் இது நிச்சயம் வெற்றி பெறும் என்று தோன்றியது. இந்தப் படத்தின் ஆன்மாவே அதன் கதை. ரவி தேஜா சாருக்கு கமர்ஷியல் சினிமாவில் தனித்துவமான இடம் உள்ளது. இயக்குநர் சிவா நிர்வாணாவுக்கும் இந்தப் படத்தின் மூலம் தனி ரசிகர் வட்டம் உருவாகும். குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா தனது நடிப்பிற்காக பல விருதுகளைப் பெறுவார் என்று நம்புகிறேன். குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து பார்க்க வேண்டிய படம் இது” என்றார்.
நடிகர் ரவி தேஜா பேசுகையில், படக்குழுவினரின் உழைப்பை பாராட்டினார். “இந்தப் படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றி. ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசைதான் இந்தப் படத்தின் ஆன்மா. தெலுங்கில் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நட்சத்திராவுக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது. பிரியா பவானி சங்கரும் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். தயாரிப்பாளர்களின் ஆதரவுக்கு நன்றி. இயக்குநர் சிவா நிர்வாணாவை எனக்கு மிகவும் பிடிக்கும். அதற்கான காரணத்தை படத்தின் வெற்றி விழாவில் கூறுகிறேன். முதலில் படத்தைப் பாருங்கள், பிறகு உங்கள் கருத்தை சொல்லுங்கள்” என்றார்.
குடும்ப உறவுகள், தந்தை–மகள் பாசம், நம்பிக்கை, ஆன்மீகம் மற்றும் திரில்லர் அம்சங்களை இணைத்து உருவாகியுள்ள ‘இருமுடி கட்டு’, உணர்வுப்பூர்வமான அனுபவத்தை வழங்கும் படமாக அமைந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தெலுங்கில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழிலும் குடும்ப ரசிகர்களின் ஆதரவைப் பெறும் என்ற நம்பிக்கையுடன் படக்குழுவினர் உள்ளனர்.