ஜி.வி. பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்க, சீன் ரோல்டன் இசையமைக்கும் புதிய திரைப்படமான ‘நிஞ்ஜா’படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 24ஆம் தேதி தஞ்சாவூரில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இயக்குநர் முருகு எழுதி இயக்கும் இப்படம் முழுமையான ரொமாண்டிக் காமெடி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகிறது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களாக தனித்துவமான அடையாளத்தைப் பெற்றுள்ள ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சீன் ரோல்டன் முதன்முறையாக இணையும் இந்தக் கூட்டணி, படம் குறித்த அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலில் இப்படத்தின் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஜி.வி. பிரகாஷ் குமார், தற்போது கதாநாயகனாகவும் நடிக்கிறார்.
‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘லவ் டுடே’, ‘பார்க்கிங்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து கவனம் பெற்ற பிரார்த்தனா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜென்சன் திவாகர், ராதாரவி, தீபா ராமானுஜம், தேவதர்ஷினி, கல்யாணி நடராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘நிஞ்ஜா’ திரைப்படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் நிறுவனங்களின் சார்பில் எஸ். சாய் தேவானந்த் மற்றும் கே.எஸ். சினிஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படத்தை தயாரித்த கே.எஸ். சினிஷ், தற்போது அர்ஜுன் தாஸ் மற்றும் சாண்டி நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். அதேபோல், பா. இரஞ்சித் – ஆர்யா கூட்டணியில் உருவாகி வரும் ‘வேட்டுவம்’ திரைப்படத்தையும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
தஞ்சாவூரில் உள்ள ஸ்ரீபதி சினிமாஸில் நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன் ‘நிஞ்ஜா’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பு தொடர்ந்து 20 நாட்கள் தஞ்சாவூரில் நடைபெறவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ள நிலையில், கேமராவுக்கு முன்னும் பின்னும் பல புதிய திறமையாளர்கள் இப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவாளராகவும், கணேஷ் சிவா படத்தொகுப்பாளராகவும், கோபி ஆனந்த் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். பிரியா ரவி ஆடை வடிவமைப்பையும், தினேஷ் காசி சண்டைக் காட்சிகளையும் கவனிக்கின்றனர்.
காதல், நகைச்சுவை, குடும்ப உறவுகள் மற்றும் இளம் தலைமுறையை கவரும் பொழுதுபோக்கு அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகும் ‘நிஞ்ஜா’, ஜி.வி. பிரகாஷ் குமார், சீன் ரோல்டன் மற்றும் அறிமுக இயக்குநர் முருகு ஆகியோரின் புதிய கூட்டணியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் தொடங்கியுள்ள நிலையில், திரைப்படம் தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.